search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்த 2 வீரர்களை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்
    X

    இந்த 2 வீரர்களை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்

    • சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட அணியில் சேர்க்கப்படவில்லை.
    • ஒரு வித்தியாசத்திற்காவது ஒரு லெக் ஸ்பின்னரையும் சேர்த்திருக்கலாம்.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது சமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையிலேயே, நான் சஞ்சு சாம்சனுக்காக வருத்தப்படுகிறேன். ஏனெனில் அவர் ரன்கள் எடுக்கும் போதெல்லாம், அவர் எப்போதும் முதலில் அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை.

    நீங்கள் 15 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் ஒருநாள் போட்டி வடிவம் அவரது பேட்டிங்கிற்கு ஏற்றது. மேலும் அவரிடம் 55-56 சராசரி உள்ளது. அப்படி இருக்கும் நிலையிலும் அவர் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட சேர்க்கப்படவில்லை. இப்படியான ஒருவீரரை நீங்கள் அணியில் சேர்க்க விரும்பினால், நீங்கள் அணியில் அதற்கான ஒரு இடத்தை உருவாக்கலாம்.

    மேலும் நீங்கள் 4 ஸ்பின்னர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதில் இரண்டு வீரர்கள் இடது கை ஸ்பின்னர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் ஒரு வித்தியாசத்திற்காவது ஒரு லெக் ஸ்பின்னரையும் சேர்த்திருக்கலாம். அந்தவகையில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். இந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்காத அளவிற்கு அவர் என்ன தப்பு செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    Next Story
    ×