என் மலர்
கிரிக்கெட் (Cricket)
கோலிக்கு பிடிக்கவில்லை என்றால் அணியில் இடம் கிடையாது- ராயுடு குறித்து உத்தப்பா ஓபன் டாக்
- அம்பத்தி ராயுடு உலகக் கோப்பை செல்வதற்காக உடைகளை எடுத்து வைத்து விட்டார்.
- ஒரு வீரரை அணியில் தேர்வு செய்து விட்டு அவருக்கான வாய்ப்புகளை நீங்கள் இழுத்து மூடக்கூடாது.
சென்னை:
2019-ம் ஆண்டின் துவக்கத்தில் அம்பத்தி ராயுடு இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். அவர் 2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார் என்றும், அவர் நான்காம் வரிசை வீரராக இருப்பார் என்றும் இந்திய அணி வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.
ஆனால், 2019 உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவித்த போது அதில் பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அம்பத்தி ராயுடுவுக்கு மாற்று வீரராக, ரிசர்வ் வீரராகக் கூட அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அனுபவம் இல்லாத விஜய் சங்கர் இடம் பெற்று இருந்தார்.
அது குறித்து அம்பத்தி ராயுடு சமூக வலைதளத்தில் விமர்சித்து இருந்தார். அதன் பின் அம்பத்தி ராயுடுவுக்கு எப்போதும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்து ராபின் உத்தப்பா கூறியதாவது:-
விராட் கோலிக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், ஒருவர் நல்லவீரர் என இல்லை என அவர் நினைத்தால், அவரை வெட்டி விட்டு விடுவார். அம்பத்தி ராயுடு அதற்கு சிறந்த உதாரணம்.
அது போல செய்தால் நிச்சயம் நாம் மோசமாக உணர்வோம். ஒவ்வொருவருக்கும் அணித் தேர்வில் சில விருப்பங்கள் இருக்கும். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஒரு வீரரை அணியில் தேர்வு செய்து விட்டு அவருக்கான வாய்ப்புகளை நீங்கள் இழுத்து மூடக்கூடாது.
அதாவது அம்பத்தி ராயுடுவை உலகக் கோப்பை தொடருக்கு முந்தைய தொடர் வரை அணியில் தேர்வு செய்து விட்டு, உலகக் கோப்பை அணியில் அவரை நீக்கும் போது அந்த வீரரின் மனநிலை மோசமாகி விடும். அம்பத்தி ராயுடு உலகக் கோப்பை செல்வதற்காக உடைகளை எடுத்து வைத்து விட்டார். தனது கிரிக்கெட் உபகரணங்களுக்கான பையையும் எடுத்து வைத்து விட்டார். எல்லாம் அவரது வீட்டில் தயாராக இருந்தன. தான் உலகக் கோப்பைக்கு செல்வதாகவே அவர் நினைத்தார். ஆனால், திடீரென அவருக்கான கதவை நீங்கள் அடைத்து விட்டீர்கள். அது சரியல்ல.
என ராபின் உத்தப்பா கூறினார்.