search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    துலீப் கோப்பை: அபிமன்யு அபார சதம்-3ம் நாள் முடிவில் இந்தியா பி அணி 309/7
    X

    துலீப் கோப்பை: அபிமன்யு அபார சதம்-3ம் நாள் முடிவில் இந்தியா பி அணி 309/7

    • 3ம் நாள் முடிவில் இந்தியா பி அணி 309 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் அபிமன்யு சதமடித்து ஆடி வருகிறார்.

    ஐதராபாத்:

    துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். மனவ் சுதார் 82 ரன், பாபா இந்திரஜித் 78 ரன், கெய்க்வாட் 58 ரன், ரஜத் படிதார் 40 ரன், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜெகதீசன் 70 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அபிமன்யு பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரதம் சிங் சதமடித்து 122 ரன்னும், மயங்க் அகர்வால் 56 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். திலக் வர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்து 111 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 64 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 486 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா டி அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா டி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் 426 ரன்கள் எடுத்தால் இந்தியா டி அணி வெற்றி பெறும்.

    Next Story
    ×