என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா

- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் அய்யர்-அக்சர் படேல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்த ஷ்ரேயாஸ் அய்யர் 79 ரன்னுக்கும், அக்சர் படேல் 42 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் நியூசிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.