என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே? நாளை கொல்கத்தாவுடன் சேப்பாக்கத்தில் மோதல்
- சென்னை சூப்பர்கிங்ஸ் இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி விட்டது.
- ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சென்னை:
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.
ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 4-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது
சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி.யிடம் (சேப்பாக்கம்) 50 ரன்னிலும், ராஜஸ்தானிடம் (கவுகாத்தி) 6 ரன்னிலும், டெல்லி கேப்பிட்டல்சிடம் (சேப்பாக்கம்) 25 ரன்னிலும், பஞ்சாப்பிடம் (நியூ சண்டிகர்) 18 ரன்னிலும் தொடர்ச்சியாக தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது போட்டியில் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இங்கு நடக்கும் 4-வது போட்டியாகும்.
தொடர்ந்து 4 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்கே. அதில் இருந்து மீண்டு வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது.
சென்னை சூப்பர்கிங்ஸ் இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி விட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெற்றி வரை நெருங்கினாலும் தோல்வியால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சி.எஸ்.கே. வீரர்கள் அதிரடியாக ஆடுவது அவசியம். தோனி அளவுக்கு கூட மற்ற பேட்ஸ்மேன்களால் சிக்சர்களை வெளிப்படுத்த இயலவில்லை. மற்ற அணிகளில் இருப்பது போல இளமையான அதிரடியாக ஆடக்கூடிய வீரர் தான் அணிக்கு தேவை. இல்லையென்றால் தற்போது இருக்கும் வீரர்கள் அதிரடியாக விளையாடுவது மிகவும் அவசியமாகும்.
நாளை போட்டியிலாவது வெற்றியை தேடி தரமாட்டார்களா? என்ற ஆதங்கத்துடன் சி.எஸ்.கே.வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
கொல்கத்தா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது.
6-வது இடத்தில் உள்ள அந்த அணி ராஜஸ்தான் (8 விக்கெட்), ஐதராபாத் (80 ரன்) ஆகியவற்றை வென்றது. பெங்களூரு (7 விக்கெட்), மும்பை (8 விக்கெட்), லக்னோ (4 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது. அந்த அணி சென்னையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கொல்கத்தா அணியில் கேப்டன் ரகானே, வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியையொட்டி பார்வையாளர்கள் மெட்ரோ ரெயிலில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்.
ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டின் குறியீட்டை தானியங்கி எந்திரத்தில் ஸ்கேன் செய்து ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் செல்லலாம்.






