என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை.. கோலிக்கு பந்து வீசும் போது உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்- வைரல் வீடியோ
- 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார்.
- நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் குஜராத் அணிக்காக முதல் முறையாக விளையாடிய சிராஜ் குஜராத் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக ஆர்சிபி அணி பேட்டிங் செய்த போது முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சால்ட் ஒரு ரன் எடுத்தார். இதனையடுத்து விராட் கோலி ஸ்ட்ரைக்கு வந்தார். அவருக்கு எதிராக பந்து வீச ஓடி வந்த சிராஜ், பாதி வழியில் பந்து வீச முடியாமல் திரும்பினார். அப்போது சிராஜ் கையை அசைத்து மன்னித்து விடுங்கள் என்பது போல சைகை காட்ட பதிலுக்கு விராட் பரவாயில்லை என்பது போல சைகை காட்டினார். இருவரது முகத்திலும் ஒருவிதமான அன்பு வெளிப்பட்டது.
இந்த உணர்ச்சிவசமான சம்பவத்தை ஆர்சிபி ரசிகர்கள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நான் ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். ஏனென்றால் நான் ஆர்சிபிக்காக 7 ஆண்டுகள் விளையாடிருக்கின்றேன். இதன் காரணமாக இன்று ஆட்டத்தில் நான் கொஞ்சம் பதற்றமாகவும் உணர்ச்சி வசப்பட்டேன் என போட்டிக்கு பிறகு சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.
7 ஆண்டுகளாக ஆசிபி அணிக்காக விளையாடி சிராஜ்-ஐ ஆர்சிபி அணி தக்க வைக்காமல் அணியை விட்டு நீக்கியது. இதனால் கடுப்பான சிராஜ் தற்போது ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய போது தனது கோபத்தை பந்து வீச்சில் வெளிப்படுத்தினார் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல தன்னால் முடிந்ததை அவர் செய்தார் என்றும் பலர் கூறினர். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்கலாம் எனவும் அவரது அணி வெற்றி பெற அவர் உழைத்தார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






