search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    புனே டெஸ்ட் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 255 ரன்னில் ஆல்அவுட்- இந்தியாவுக்கு 359 வெற்றி இலக்கு

    • 2-வது இன்னிங்சில் டாம் லாதம் 86 ரன்களும், பிளிப்ஸ் 48 ரன்களும் சேர்த்தனர்.
    • வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே பந்து அதிக அளவில் டர்ன் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திணறினர்.

    என்றபோதிலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் குவித்தது. கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 156 ரன்னில் சுருண்டது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தலா 30 ரன்கள் சேர்த்தனர். சான்ட்னெர் 7 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் டாம் லாதம் 86 ரன்கள் விளாசினார். இது நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்க உதவியாக இருந்தது.

    நேற்றை 2-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்திருந்தது. பிளண்டெல் 30 ரன்களுடனும், பிளிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளண்டெல் 41 ரன்கள எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் சான்ட்னெர் 4 ரன்னிலும், சவுத்தி ரன்ஏதும் எடுக்காமலும், அஜாஸ் பட்டுல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கிளென் பிளிப்ஸ் தாக்குப்பிடித்து விளையாடினார். கடைசி விக்கெட்டாக வில்லியம் ஓ'ரூர்கே ரன்ஏதும் அடிக்காமல் ரன்அவுட் ஆக, நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    நியூசிலாந்து ஒட்டுமொத்தமாக 358 ரன்கள் முன்னிலைப் பெற்று, இந்தியாவுக்கு 359 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. பிளிப்ஸ் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    Next Story
    ×