என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பரபரப்பான கட்டத்தில் செஞ்சுரியன் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 27/3
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் அரை சதம் கடந்து, 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 19 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறியது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் 121 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா அணியும், 7 விக்கெட்களை வீழ்த்தினால் பாகிஸ்தானும் வெற்றி பெறும் என்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.