search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கேன் வில்லியம்சன், கான்வே அபாரம்: தென்ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து
    X

    கேன் வில்லியம்சன், கான்வே அபாரம்: தென்ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து

    • கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் விளாசினார்.
    • கான்வே 97 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

    மூன்று அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது.

    லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் போஸ்ச், மிலானி மோங்க்வானா, மேத்யூ பிரீட்ஸ்கீ, முத்துசாமி ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் தொடக்க வீரரான பிரீட்ஸ்கி சிறப்பாக விளையாடி 148 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 150 ரன்கள் விளாசினார்.

    அறிமுக போட்டியில் 150 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். வியான் முல்டர் 64 ரன்களும், ஜேசன் ஸ்மித் 41 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், வில் ஓ'ரூர்கே 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வில் யங் 19 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டேவன் கான்வே உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 18.2 ஓவரில் 100 ரன்களை கடந்த நியூசிலாந்து 30.1 ஓவரில் 200 ரன்களை கடந்தது.

    கான்வே 64 பந்தில் அரைசதமும், கேன் வில்லியம்சன் 44 பந்தில் அரைசதமும் அடித்தனர். தொடர்ந்து இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

    கேன் வில்லியம்சன் 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் கான்வே சதத்தை எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 1 சிக்சர் இடங்கும். கான்வே- கேன் வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

    என்றாலும் கேன் வில்லியம்சன் கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்னுடனும், பிலிப்ஸ் 28 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    Next Story
    ×