என் மலர்
கிரிக்கெட் (Cricket)
முடிவுக்கு வந்த சாம்பியன்ஸ் டிராபி பஞ்சாயத்து.. அப்டேட் கொடுத்த ஐசிசி
- 2024 - 2027-ம் ஆண்டு வரை இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், பொதுவான மைதானத்தில் நடைபெறும்.
- 2028-ம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ தெரிவித்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டியை மட்டும் துபாயில் நடத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டது.
ஐசிசி-யின் ஹைபிரிட் மாடல் தொடரை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 2026 வரையிலான ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும் 2024 - 2027-ம் ஆண்டு வரை இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், 2 அணிகளுக்கும் பொதுவான மைதானத்தில் நடைபெறும்.
2025-ம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. அதனை தொடர்ந்து 2026-ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இதற்கான போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
2028-ம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான அட்டவணை விரைவில் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.