search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம்- முகமது சமியின் பந்துவீச்சு குறித்து ரோகித் சர்மா புகழாரம்
    X

    இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம்- முகமது சமியின் பந்துவீச்சு குறித்து ரோகித் சர்மா புகழாரம்

    • ஒவ்வொரு முறையும் அவரிடம் பந்தை கொடுக்கும்போது சிறப்பான செயல்பாடு வெளிவந்தது.
    • பெரிய தருணங்களில் முன்னேற அவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு தேவை.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் உள்ள இந்தியா, வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியது.

    துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் சதம் அடித்தார்.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எந்தவொரு போட்டிக்கு முன்பும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேசிங்கின்போது வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்படும். ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்கனவே நாங்கள் இருந்திருக்கிறோம். எங்களது அணியில் நிறைய அனுபவம் இருக்கிறது. இறுதிக்கட்டத்தில் சுப்மன் கில், கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினார்கள்.

    முகமது சமியின் பந்துவீச்சு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம். அவரிடம் உள்ள தரம் பற்றி எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் அவரிடம் பந்தை கொடுக்கும்போது சிறப்பான செயல்பாடு வெளிவந்தது. பெரிய தருணங்களில் முன்னேற அவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு தேவை.

    சுப்மன் கில்லின் தரத்தை நாங்கள் அறிவோம். அவர் சமீப காலமாக அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால்அவரது ஆட்டத்தை பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடைசி வரை அவர் பேட்டிங் செய்ததை பார்க்க நன்றாக இருந்தது.

    அக்சர் பட்டேலின் ஹாட்ரிக் வாய்ப்பின்போது கேட்சை தவறவிட்டு விட்டேன். இதனால் அக்சர் படேலை இரவு உணவுக்கு நான் அழைத்துச் செல்லலாம்.

    அது எளிதான கேட்ச். என்னுடைய தரத்திற்கு அந்த கேட்சை நான் பிடித்திருக்க வேண்டும். ஆனால் விளையாட்டில் இது போன்று நடக்கும்.

    ஆடுகளம் அடுத்த போட்டிகளில் எப்படி இருக்கும் என்று சொல்வதற்கு நான் மைதான பராமரிப்பாளர் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே மைதானத்தில் இந்திய அணி நாளை மறுநாள் (23-ந்தேதி) பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    Next Story
    ×