search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்ச்சையான குத்துசண்டை போட்டி... அல்ஜீரிய வீராங்கனைக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு
    X

    சர்ச்சையான குத்துசண்டை போட்டி... அல்ஜீரிய வீராங்கனைக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு

    • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.
    • இவர்கள் எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் மோதினார்கள்.

    போட்டி தொடங்கியதும் இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் அவரது முகத்தை நோக்கி கெலிஃப் வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.

    இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    போட்டிக்கு பின்பு பேசிய இத்தாலி வீராங்கனை கரினி, "ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

    இதனையடுத்து இப்போட்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான சீன தைபே வீராங்கனை லின் யு-டிங் ஆகியோர் பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பெண்கள் தான் என உறுதி செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

    அதில், "ஒவ்வொரு வீரருக்கும் பாரபட்சமின்றி விளையாட்டைப் பயிற்சி செய்ய உரிமை உண்டு. கெலிஃப் மற்றும் யூ-டிங் இருவரும் தங்களை பெண்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

    விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அனைத்து மருத்துவ விதிமுறைகளுக்கு இணங்கி தான் குத்துச்சண்டை போட்டியில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


    2023 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து அவர்கள் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.

    பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்த 2 வீராங்கனைகள் பற்றிய தவறான தகவல்களை நாங்கள் பார்த்து வருகிறோம். பெண்கள் பிரிவில் இந்த 2 வீராங்கனைகளும் பல ஆண்டுகளாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். .

    ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த 2 குத்துச்சண்டை வீராங்கனைகளும் தற்போது எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×