search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூவம் ஆற்றில் 4-வது முறையாக தற்காலிக பாலம் அமைக்கும் பணி
    X

    கூவம் ஆற்றில் 4-வது முறையாக தற்காலிக பாலம் அமைக்கும் பணி

    • மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
    • தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.

    மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×