search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    DMK
    X

    அமைச்சர் நேருவிடம் கொந்தளிந்த திமுக கவுன்சிலர்...

    • கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா பதவி வகித்து வந்தார். கடந்த 2¼ ஆண்டுகளாக மேயராக இருந்த அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தலைமையில் கோவையில் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தி.மு.க. மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முன்னதாக, கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பணிகள் குழு தலைவரும், கவுன்சிலருமான சாந்தி முருகன், "கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சுட்டோம். கட்சிக்காக 50 வருஷம் கஷ்டப்பட்டு, கோடிக்கணக்குல இழந்து ஒடுக்கப்பட்டிருக்கோம். சும்மா ஒன்னும் வரலை. இதையெல்லாம் பார்த்து பொறுத்துட்டு இருக்க முடியாது..." என அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி முன்னிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நீங்கள் பொதுவாக பேசுறீங்க. நீங்கள் எல்லாம் எப்படி உறுப்பினராகி வந்தீங்களோ.. அதுமாதிரி தான் நான் சேர்மன் ஆகி இந்த இடத்துக்கு வந்துருக்கேன். உள்ளாட்சிக்கு கடந்த காலத்தில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்க, தளபதி ஆட்சியில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்கன்னு உங்களுக்கு சொல்றேன். கோவைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிங்க என்று முதலமைச்சர் என்னிடம் கேட்டார். அதற்கு 3 கோடி ஒதுக்கியிருக்கோம்னு சொன்னேன், அதற்கு 3 கோடி பத்தாது 300 கோடி ஒதுக்குன்னு முதலமைச்சர் சொன்னார். பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் பத்தாண்டு காலம் நிறுத்திவைக்கப்பட்ட பணி 2 ஆண்டு காலத்தில் நடக்கணும் என்பது இயலாத காரியம். எனவே உங்களுக்கும் ஆதங்கம் இருக்கும். இப்ப சொல்லியிருக்கிங்க.. அதை செய்து கொடுப்போம். உறுதியா செய்கிறோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை என்றார்.

    Next Story
    ×