search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெளிநாட்டு வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை: கலெக்டர் எச்சரிக்கை
    X

    வெளிநாட்டு வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை: கலெக்டர் எச்சரிக்கை

    • சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர்.
    • வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 'டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்' வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர்.

    அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது. எனவே வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொள்ள வேண்டும்.

    அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.amigrate.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும் poechennai1 @mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 18003093793, 8069 009901, 80690 09900 (மிஸ்டு கால் நம்பர்) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×