என் மலர்
தமிழ்நாடு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை
- சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.
சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
நாளை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே, கடந்த வாரத்தில் அமித்ஷா தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.