search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
    X

    வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதி வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத்தையும் அவளூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் உள்ளது.

    இந்த தரைப்பாலத்தின் வழியாக அவளூர், அங்கம்பாக்கம், கண்ணடியன் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், தம்மனூர், காம்மராசபுரம், காவாந்தண்டலம், நெய்யாடு பாக்கம், வள்ளி மேடு, இளையனார் வேலூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வாலாஜாபாத்திற்க்கு வந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அன்றாட பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சேதமடைந்தது.

    பின்னர் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தை சீரமைத்து தர நெடுஞ்சாலை துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் பாலாற்றின் குறுக்கே மாற்றுப்பாதை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டுவிட்டு, சேதம் அடைந்த வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

    சேதமடைந்த தரைப்பாலத்தின் பகுதிகளில் மழை வெள்ளம் செல்வதற்கு வசதியாக மிகப்பெரிய குழாய்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைக்க வசதியாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே தரைப்பாலம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×