என் மலர்
தமிழ்நாடு
95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? ஒரு மணி நேரம் தேடியும் காணோம்... ஜே.பி.நட்டாவுக்கு எம்.பி.க்கள் கேள்வி
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதிக்கு சென்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டார்.
- மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை என குற்றச்சாட்டு
மதுரை:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் கூற்றுப்படி, 95 சதவீத பணிகள் நிறைவுபெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துமவனையின் கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்றார். இது தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.
நட்டாவின் பேச்சைத் தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நேற்றே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் சென்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிறைவடைந்த பணிகளை பார்க்கப் போவதாகவும், அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி, மதுரை எம்பி சு.வெங்கடேசனுடன் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மருத்துவமனைக்கான எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. சுற்றிலும் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. காலியாக உள்ள அந்த இடத்தில் இருவரும் நடந்து செல்லும் புகைப்படங்களை மாணிக்கம் தாகூர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
We went to the Thoppur AIIMS Madurai site … we found nothing . #MaduraiAIIMS pic.twitter.com/9CBxHEs6Mt
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 23, 2022
அதில், 'அன்பிற்குரிய நட்டா அவர்களுக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகளை முடித்தமைக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூர் வளாகத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்' என கூறி நட்டாவை டேக் செய்துள்ளார். அத்துடன் 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
'பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்' என சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.
உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை. நிதி ஒதுக்கீட்டிலும் குளறுபடிகள் உள்ளன என எம்.பி.க்கள் இருவரும் குற்றம்சாட்டினர்.