search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுக்கூட்ட மேடையில் அ.தி.முக. நிர்வாகியை அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X

    பொதுக்கூட்ட மேடையில் அ.தி.முக. நிர்வாகியை அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    • கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது.
    • 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூர் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் நலிவடைந்து வருகிறது. பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க போராட வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் உடனே நிவாரண நிதி வீடு தேடி வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது. இது தான் தி.மு.க. அரசின் சாதனை. சிவகாசியில் சுற்றுச்சாலை திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நிதி ஒதுக்கினார். ஆனால் அந்த திட்டம் 2 நாளைக்கு முன்னர் தான் பூமிபூஜை போடப்பட்டு தொடங்கப்படுகிறது.

    2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள். எம்.பி. தேர்தலில் இந்த தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று இருக்க வேண்டும். தில்லுமுல்லு செய்து அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த பகுதியில் உள்ள தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் 18-ம் படி கருப்பசாமியாக வழித்துணை வருவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா, மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ், மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்த நிர்வாகிகள் முண்டியத்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக்கொண்டு வந்த நிர்வாகியை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×