search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
    X

    கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

    • 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • 7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது.

    காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனையும் நடைபெற்று பின்னர் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    திருவிழாவின் தொடக்கமாக கோவில் தக்கார் அருள் முருகனிடம் தாம்பூல தட்டு வழங்கிய காட்சி.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30-க்கு விஸ்வ ரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடை பெறுகிறது.

    மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபி சேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும்-தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    பக்தர்கள் விரதம் இருப்பதற்காக கோவில் வெளி கிரி பிரகாரங்களில் 18 இடங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பரப்பளவில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியதையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

    தற்காலிக குடில்களிலும், கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    சஷ்டி திருவிழாவையொட்டி நடைபெறும் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி, தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவைகள் சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கடலோர காவல் படையினரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காவல்துறை சார்பில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இன்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராள மானோர் திரண்டனர். இன்று காலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×