search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோர்ட்டு வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி அரிவாள் வெட்டு- உடந்தையாக இருந்த பெண் கைது
    X

    கோர்ட்டு வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி அரிவாள் வெட்டு- உடந்தையாக இருந்த பெண் கைது

    • பிற வக்கீல்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தாலுகா அலுவலக சாலையில் உள்ள கோர்ட் வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், மூன்று கோர்ட்டுகள், மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையம், பி.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தினமும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள், போலீசார் மற்றும் வக்கீல்கள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக வந்து இருந்தனர்.

    ஓசூரைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கண்ணன் (வயது 30), வக்கீல். இவர் ஓசூர் உழவர் சந்தை அருகில் உள்ள மூத்த வக்கீல் சத்யநாராயணன் என்பவரிடம் ஜூனியர் வக்கீலாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று மதியம் கோர்ட்டில் வழக்கு சம்மந்தமாக ஆஜராகிவிட்டு வெளியே நடந்து வந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த ஓசூர் நாமல்பேட்டை பகுதியை சேர்ந்த குமாஸ்தா ஆனந்தகுமார் (39) என்பவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை, ஆனந்தகுமார் ஆட்டை வெட்டுவதை போல தலை, முகம், கழுத்து உள்பட உடலில் 8 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    கோர்ட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணனை ஆத்திரம் தீர வெட்டி தள்ளிய ஆனந்தகுமார் பின்னர் அங்கிருந்து எந்தவித பதற்றமும் இன்றி, நேராக ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அரிவாளுடன் சென்றார். அங்கு மாஜிஸ்திரேட்டு முன்பு அவர் சரண் அடைந்தார்.

    இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணன் துடிதுடித்து உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்ட பிற வக்கீல்கள் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கழுத்து, முகம் பகுதியில் வெட்டுகாயம் ஏற்பட்டதால் நள்ளிரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

    தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால் ஆனந்தகுமார் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்தியவதி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×