என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓசூர் அருகே பேட்டராய சாமி கோவில் தேரோட்டம்- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
    X

    ஓசூர் அருகே பேட்டராய சாமி கோவில் தேரோட்டம்- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

    • பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு ராமபாண நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிாவசன், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் மேயர் சத்யா, அ.தி.மு.க. நிர்வாகி ஜெயபிரகாஷ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் மாது, பழனிசாமி, செயல் அலுவலர் மஞ்சுநாத், ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து செண்டை மேள இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர்த்திருவிழாவையொட்டி இன்று அன்னதானம், நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மேல் சம்பூர்ண ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இன்னிசை கச்சேரியும், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    தேர்த்திருவிழாவையொட்டி தேன்கனிக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது.

    Next Story
    ×