search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமரன் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் பெட்ரோல் குண்டுவீச்சு - விசாரணை
    X

    'அமரன்' திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் பெட்ரோல் குண்டுவீச்சு - விசாரணை

    • தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன.
    • மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

    ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து அமரன் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானாவில் உள்ள அலங்கார் தியேட்டருக்கு நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தியேட்டருக்கு வெளியில் நின்றபடியே தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அடுத்தடுத்து வீசப்பட்ட 3 பெட்ரோல் குண்டுகளும் தியேட்டர் வளாகத்தில் விழுந்து 'டமார்' என்கிற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் தியேட்டர் வளாகத்தில் தீப்பிளம்பு எழுந்தது. பெட்ரோல் குண்டுகள் விழுந்த இடம் தீப்பற்றி எரிந்தது.

    இதையடுத்து தியேட்டரில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று பார்த்தனர். வளாகத்தில் தீ பற்றிய இடத்தை அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் தியேட்டரில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் தியேட்டருக்கு விரைந்து சென்றனர். நெல்லை போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் சரவணன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோரும் விரைந்து சென்று தியேட்டர் ஊழியர்களிடம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.

    தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன. அவைகளை போலீசார் தடயங்களாக சேகரித்தனர்.

    பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்கள் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து ஆய்வு செய்தனர். தியேட்டருக்கு வெளியில் இருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில் 2 பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்து அதில் தீ வைத்து கொளுத்தி தியேட்டர் மீது வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் அவர்கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பெட்ரோல் குண்டு வீச்சில் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அவர்கள் பீர் பாட்டில்களை பெட்ரோல் குண்டுகளாக மாற்றி வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. 2 குண்டுகள் தியேட்டர் வளாகத்திற்குள் வீசப்பட்ட நிலையில் 3-வது குண்டு தவறி கீழே விழுந்து தீ பிடித்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.

    மர்ம நபர்கள் இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து இருவரின் பின்னணி பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த தியேட்டரில் அமரன் படம் வெளியிடப்பட்ட போதே பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடந்த வாரம் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இயல்பு நிலை திரும்பி இருந்தது. அதை பயன்படுத்தி மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்று உள்ளனர்.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×