என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.
- பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்தனர்.
கின்சாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர். அப்போது துரதிருஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.
- டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
- இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான் என தெரிவித்தார் சஞ்சு சாம்சன்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், நிதிஷ் ரானா அரை சதம் கடந்து அவுட்டாகினர்.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:
காயம் ஏற்பட்டதால் என்னால் பேட் செய்ய முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை. தற்போது நல்ல முறையில் உணர்கின்றேன். என் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துவிட்டு அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம்.
என்னுடைய பீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இன்று களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம்.
ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். உலகின் மிகச் சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கின்றார். இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
நாங்கள் பேட்டை கடுமையாக சுற்றி ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் போட்டியை எங்களிடமிருந்து ஸ்டார்க் கவர்ந்து சென்று விட்டார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் எங்கள் அணியில் ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என தெரிவித்தார்.
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
- முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சுதி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் பகுதிகளில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க மேற்குவங்க போலீசார் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர்.
சிறப்பு விசாரணைக்கு சிஐடி, எஸ்டிஎப், ஐபி-யைச் சேர்ந்த 9 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்களுடன் தொடர்புடைய அனைத்து எப்.ஐ.ஆர், விசாரணைகள் மற்றும் உளவுத்துறை மதிப்பீடுகளையும் இந்தக் குழு கையாளும்.
- ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.
- அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் டிரம்ப்.
தெஹ்ரான்:
ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அப்போது, அமெரிக்காவும், ஈரானும் அணு ஆயுத பயன்பாடு பற்றி அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளன.
ஓமனின் வெளியுறவுத்துறை மந்திரி பத்ர பின் ஹமத் அல்-புசைதி என்பவரை தலைமை மத்தியஸ்தராக கொண்டு ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது ஆக்கப்பூர்வ முறையில் மற்றும் பரஸ்பர மதிப்பு அடிப்படையில் நடந்துள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரானிய அரசு டிவி தெரிவித்துள்ளது.
- ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்த 5 பேர் கொண்ட கும்பல் சின்னதுரையை சரமாரி தாக்கியது.
- காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை. கடந்த 2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர் சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டினர். இதைத்தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன்பின், சிகிச்சை பெற்று குணமடைந்து தனது படிப்பை தொடர்ந்த சின்னதுரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 78 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. சின்னதுரையை ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, நெல்லை மாநகர துணை ஆணையர் சாந்தாராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற 5வது வெற்றி இதுவாகும். புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்தது டெல்லி. ராஜஸ்தான் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.
- பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.
- பிரியங்கா, பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.
சென்னை:
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் சீசன்ஸ், ஸ்டார் மியூசிக் சீசன்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.
இந்நிலையில், தற்போது வசி என்பவருடன் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.
- தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.
- இந்தியாவிலிருந்து பயணிகள் வழக்கமாக 2025 மே மாதத்தில் சவுதி அரேபியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.
2025-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
வரவிருக்கும் 2025 ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.
இந்த அவசர மற்றும் கவலையளிக்கும் விஷயத்தை பிரதமர் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளாகக் கருதப்படும் தூண்களில் ஒன்றாகும். முதலமைச்சர், இது முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மற்றும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளும் மதக் கடமையாகும்.
ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பினை செலவு செய்கிறார்கள்.
இந்த ஆண்டு, ஹஜ் பயணம் 4.6.2025 முதல் 9.6.2025 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து பயணிகள் வழக்கமாக 2025 மே மாதத்தில் சவுதி அரேபியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், சுமார் 1,75,000 இந்திய ஹஜ் பயணிகள் புனிதப் பயணத்தில் பங்கேற்றதாகவும், இதற்காக ஜனவரி 2025-இல், இந்தியா சவுதி அரேபியாவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1,75,025 ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்தது.
இந்த ஒதுக்கீடு 70:30 என்ற விகிதத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள் மற்றும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டது.
2025ம் ஆண்டுக்கான மாநில ஹஜ் குழுக்களுக்கு 1,22,517 இடங்களும், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு 52,507 இடங்களும் ஒதுக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியா திடீரென இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாகத் தாம் அறிய வந்துள்ளேன்.
அதன் காரணமாக தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 52,000 ஹஜ் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவு ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள பல ஹஜ் பயணிகளை ஆழ்ந்த கவலையிலும் நிச்சயமற்ற நிலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலைமையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனையை அவசரமாக சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்சென்று விரைவான தீர்வினைப் பெறவேண்டும்.
பிரதமரின் தலையீடு, ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவினை மீண்டும் கொண்டுவந்து, ஹஜ் பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதியை அளிக்கும் என்று தாம் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ் உடன் மோதினார்.
இதில் 4-6 என முதல் செட்டை இழந்த ரூனே அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- அக்சர் பட்டேல் 14 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் விளாசினார்.
- அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2025 தொடரின் 32ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணியின் மெக்கர்க்- அபிஷேக் பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கம்போல் சொற்ப ரன்னில் (9) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட்டானார்.
ஒரு பக்கம் இரண்டு விக்கெட் இழந்தாலும் மறுபக்கம் அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனால் ஓவர் செல்ல செல்ல ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
3ஆவது விக்கெட்டுக்கு அபிஷேக் பொரோல் உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். கே.எல். ராகுல் 32 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் 14 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் விளாசினார்.
ஸ்டப்ஸ் 34 ரன்களும், அஷுடோஷ் சர்மா 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழபபிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது.
- தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தது.
இந்நியைலில், தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வரும் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பீட்டு இரண்டு தக்ஸ் எனவும் பதிவிட்டுள்ளனர்.
- 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இத்தாலி மற்றும் இந்தியாவுக்கு வான்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவின் 2ஆவது பெண்மணியான தனது மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வர உள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி, வான்ஸ் அடுத்த வாரம் தொடக்கத்தில் இந்தியா வர இருக்கிறார். வருகிற 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இத்தாலி மற்றும் இந்தியாவுக்கு வான்ஸ் பயணம் மேற்கொள்வார் என அவருது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவின் 2ஆவது பெண்மணியான தனது மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வர உள்ளார். இந்தியா வரும் வான்ஸ் பிரதமர மோடியை சந்தித்து பேசுகிறார்.
இந்தியா வரும் வான்ஸ் டெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ராவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது கலாச்சார நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்.
அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த நிலையில், அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் வான்ஸ் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஜே.டி. வான்ஸ் மனைவி உஷா அமெரிக்காவாழ் இந்தியர் ஆவார்.