search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது
    X

    2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் 'பேஸ்புக்' கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது

    • எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார்.
    • டிரம்ப் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அவரது கணக்கு முடக்கப்படும்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்கை முடக்கின. இந்த சூழலில் கடந்த ஆண்டு டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார். இதனையடுத்து நவம்பர் மாதம் முதல் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது.

    இந்த நிலையில் டுவிட்டரை தொடர்ந்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா டிரம்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. டிரம்ப் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அவரது கணக்கு ஒரு மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை முடக்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் டிரம்ப் அவற்றை பயன்படுத்துவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் அவர் தனக்கென பிரத்தியேகமாக 'டுரூத் சோஷியல்' என்கிற சமூக வலைத்தளத்தை உருவாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×