என் மலர்
உலகம்

அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளது ஹமாஸ்

- ஏழு வார போர் நிறுத்தத்தின்போது 25 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
- போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பதற்கான முன்னெடுப்பு நடைபெறாமல் உள்ளது.
பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும், அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஏடன் அலெக்சாண்டரை விடுவிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ஹமாஸ் வெளியிடவில்லை.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அத்துடன் 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கண்மூடித்தனமாக தாக்குதலால் உலக நாடுகள் பணயக் கைதிகளை விடுவிக்க போர் இடைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் மீது குற்றம் சுமத்திய இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் சுமார் 14 மாதங்களாக நீடித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது 25 உயிரோடுள்ள பணயக் கைதிகளையும், 8 உயிரிழந்த பயணக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கவும், இதற்கு இணையாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கடைசி வாரம் வரை ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்து வந்தது. இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
ஏழு வார ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசாவிற்கு செல்லும் எல்லையை மூடியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து உறுதியற்ற நிலையில் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் தற்போது ஒரு பயணக்கைதி மற்றும் உயிரிழந்த 4 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது.