என் மலர்
உலகம்
வயதை குறைக்க முயலும் பிரபல தொழிலதிபரை விரட்டியடித்த காற்று மாசு.. இந்தியாவில் பட்டபாடு பற்றி புலம்பல்
- இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே என் தோலில் சொறி ஏற்பட்டது, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
- இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் பிரையன் ஜான்சன். மூளை செயல்பாட்டைக் கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை உருவாக்கும் கெர்னல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வயதை குறைக்கும் [de -ageing] முயற்சியில் கோடிகளை செலவழித்து கவனம் பெற்றவர். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்த நிலையில் டெல்லியில் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆனால் டெல்லி காற்று மாசுபாடு தாங்காமல் ஆளை விட்டால் போதும் என்று நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றார். இந்நிலையில் அதுகுறித்து நீண்டதொரு எக்ஸ் பதிவை அவர் எழுதியுள்ளார்.
அதில், இந்தியாவில் இருந்தபோது, மோசமான காற்றின் தரம் காரணமாக இந்த பாட்காஸ்டை சீக்கிரமாகவே முடித்துவிட்டேன். நிகில் காமத் ஒரு அன்பான தொகுப்பாளராக இருந்தார். நான் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். பிரச்சனை என்னவென்றால், நாங்கள் இருந்த அறைக்குள் வெளிப்புறக் காற்று உள்ளே வந்தது. அதை நான் கொண்டு வந்த காற்று சுத்திகரிப்பானால் சுத்திகரிக்க முடியவில்லை.
உள்ளே, காற்றின் தரம் AQI 130 ஆகவும், PM2.5 75 µg/m³ ஆகவும் இருந்தது, இது 24 மணி நேரத்தில் 3.4 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.
இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே, காற்று மாசுபாடு என் தோலில் சொறி ஏற்படுத்தி, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
காற்று மாசுபாடு இந்தியாவில் மிகவும் இயல்பாக பார்க்கப்படுகிறது. அதன் எதிர்மறை விளைவுகள் பற்றிய அறிவு இருந்தாலும், யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்த காற்றால் பிறப்பிலிருந்தே குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். யாரும் முகமூடியையும் அணிவதில்லை. அது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.
புற்றுநோய்களை குணப்படுத்துவதை விட காற்றின் தரத்தை சுத்தம் செய்வதன் மூலம் இந்தியா அதன் மக்களின் ஆரோக்கியத்தை பேண முடியும் என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது முழு நாட்டிற்கும் மிகவும் மோசமானது.
நான் அமெரிக்காவுக்குத் திரும்பியபோது எல்லா இடங்களிலும் உடல் பருமனானவர்களைக் கண்டேன். 42.4% அமெரிக்கர்கள் உடல் பருமனாக உள்ளனர். நான் எப்போதும் அவர்களை சுற்றி இருந்ததால், நான் பெரும்பாலும் அதைப் பற்றி மறந்துவிட்டேன். ஆனால் இந்தியா சென்று திரும்பியதும் அது எனக்கு உறைத்தது.
உடல் பருமன் நீண்ட கால காற்று மாசுபாட்டை விட மோசமானது. அமெரிக்கத் தலைவர்கள் உடல் பருமனை தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை? என்றும் தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.
When in India, I did end this podcast early due to the bad air quality. @nikhilkamathcio was a gracious host and we were having a great time. The problem was that the room we were in circulated outside air which made the air purifier I'd brought with me ineffective. Inside,… https://t.co/xTkpW567Xv
— Bryan Johnson /dd (@bryan_johnson) February 3, 2025