search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்கள்
    X

    உலக நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்களில் ஒரு சிலரை படத்தில் காணலாம்.

    உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

    • அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஐரோப்பிய நாடான அயர்லாந்தை ஆட்சி செய்வதும் ஒரு இந்திய வம்சாவளிதான்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார்.

    ஏற்கனவே குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நிக்கி ஹாலே களம் இறங்கி இருக்கிறார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம் நிக்கி ஹாலே உலக நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த பெண் அரசியல் தலைவரான கமலா ஹாரிஸ் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்தார்.

    இந்தியாவை சேர்ந்த தாய்க்கும், ஜமைக்கா நாட்டின் தந்தைக்கும் பிறந்த கமலா ஹாரிசின் இந்த வெற்றி அமெரிக்க அரசியல் அரங்கில் இந்திய வம்சாவளியினரின் பங்கு தவிர்க்க முடியாததாக மாறியிருப்பதை காட்டியது.

    அதன் எதிரொலியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாளியை சேர்ந்த 5 பேர் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகினர்.

    ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், அமி பெரா மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகிய 5 பேரும் அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகள் சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அமெரிக்கா மட்டும் இன்றி உலகின் பிற முக்கிய நாடுகளின் அரசியலிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீண்டு வருவதை காண முடிகிறது.

    அந்த வகையில் இந்தியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்று, உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்.

    210 ஆண்டுகளில் இங்கிலாந்தை ஆட்சி செய்யும் மிக இளைய பிரதமர் இவர்தான். அந்த நாட்டின் முதல் இந்து பிரதமரும் இவரே.

    ரிஷி சுனக்கை தவிர்த்து இன்னும் சில இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை மந்திரியாக உள்ளார்.

    அதேபோல் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசில் இந்திய வம்சாவளி பிரிதி படேல் உள்துறை மந்திரியாகவும், மற்றொரு இந்திய வம்சாவளி அலோக் சர்மா சர்வதேச வளர்ச்சி மந்திரியாகவும் இருந்தனர்.

    இ்ங்கிலாந்தை போல மற்றொரு ஐரோப்பிய நாடான அயர்லாந்தை ஆட்சி செய்வதும் ஒரு இந்திய வம்சாவளிதான். கடந்த 2017 முதல் 2020 வரை அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்த இந்திய வம்சாவளி லியோ வரத்கர், கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதே போல் 2015-ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக இருந்து வரும் அன்டோனியோ கோஸ்டா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

    கனடாவின் ராணுவ மந்திரியாக இருந்து வரும் அனிதா ஆனந்தின் பெற்றோர் இந்தியர்கள். இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.

    அனிதா ஆனந்தை தவிர, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளிகளான ஹர்ஜித் சஜ்ஜன் மற்றும் கமல் கேரா ஆகிய இருவரும் மந்திரிகளாக உள்ளனர்.

    அதேபோல் நியூசிலாந்தில் மந்திரியாக பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்கிற பெருமைக்குரியவர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். சென்னையில் கேரள தம்பதிக்கு பிறந்த இவர், நியூசிலாந்தின் சமூகம் மற்றும் தன்னார்வத் துறை மந்திரியாக உள்ளார்.

    கயானா நாட்டின் அதிபர் முகமது இர்பான் அலி, மொரீஷியஸ் நாட்டின் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்னாட், சீஷெல்ஸ் நாட்டின் அதிபர் வாவல் ராம்கலாவன் ஆகியோரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களே.

    இப்படி உலகம் முழுவதும் இந்திய வம்சாவளி தலைவர்கள் பலரும் உயர் பதவிகளில் இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

    Next Story
    ×