search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மோடியின் ரிஜெக்ட் லிஸ்ட்..  இந்தியாவுக்குள் நுழைய விசா மறுப்பு - அமெரிக்க அரசியல்வாதி போராட்டம்
    X

    மோடியின் 'ரிஜெக்ட் லிஸ்ட்..' இந்தியாவுக்குள் நுழைய விசா மறுப்பு - அமெரிக்க அரசியல்வாதி போராட்டம்

    • மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    • குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்திய-அமெரிக்க அரசியல்வாதி ஷாமா சாவந்த் விசா வழங்க மறுத்த மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    பெங்களூருவில் உள்ள தனது நோய்வாய்ப்பட்ட 82 வயதான தாயாரைப் பார்க்க 3 ஆவது முறையாக இந்திய விசா மறுக்கப்படுவதாக சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மோடி அரசாங்கத்தின் 'நிராகரிப்பு பட்டியலில்' [ரிஜெக்ட் லிஸ்ட்டில்] தான் இருப்பதாக தனக்குச் சொல்லப்பட்டதாக சாவந்த் கூறுகிறார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்த சாவந்த் அமெரிக்க அரசியலில், குறிப்பாக சியாட்டில் நகர அரசியலில் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

    மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்று 1994 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு, சாவந்த் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். 2003 ஆம் ஆண்டு வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

    2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

    அமெரிக்காவில் சோசலிஸ்ட் ஆல்டர்நேட்டிவ் என்ற இடதுசாரி அரசியல் கட்சியில் சேர்ந்தார். அவர் 2014 முதல் 2024 வரை சியாட்டில் நகர சபையில் பணியாற்றினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில் தனது பெயரை மோடி அரசின் ரிஜெக்ட் லிஸ்டில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்கவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதை கண்டித்து சியாட்டிலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சாவந்த் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×