என் மலர்
உலகம்
உக்ரைன் மீது கடந்த வாரத்தில் 600 ஆளில்லா விமான தாக்குதல்கள்: அதிபர் ஜெலன்ஸ்கி
- நேற்றிரவு நடந்த தாக்குதலில் 103 ஷாகித் வகை டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
- இந்த ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன என்றார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டை நெருங்கி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும் உரிய பதிலடி கொடுத்து உக்ரைன் அவற்றை மீட்டது.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. அந்த நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 103 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது:
கடந்த வாரத்தில் 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இவற்றுடன் வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் என உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு நாளும் ரஷியாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து எங்களுடைய வான்வெளியை நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.
நேற்றிரவு நடந்த தாக்குதலில் ஈடுபட்ட 103 ஷாகித் வகை ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன.
ரஷியா, அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் இருந்து அவற்றை பெற்று, உக்ரைனில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்கான ஆயுதங்களில் பயன்படுத்துகிறது.
ரஷியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என தெரிவித்துள்ளார்.