என் மலர்
Recap 2024
2024 ரீவைண்ட்: நாட்டை அதிர வைத்த முதல் மந்திரிகள் கைது
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
- அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியை ஆளும் பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை செயல்பட விடாமல் தடுக்க புலனாய்வுத் துறையை பயன்படுத்துகிறது என மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறது எதிர்க்கட்சி.
ஒரு சில மாநிலங்களில் முதல் மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதே இந்தக் குற்றச்சாட்டிற்கு காரணம்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கெஜ்ரிவாலை கைதுசெய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்குகிறது பா.ஜ.க. மிரட்டல் விடுக்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.
ஜூன் 12-ம் தேதி அமலாக்கத்துறை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமின் கிடைத்தது. செப்டம்பர் 13-ம் தேதி சிபிஐ வழக்கிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது. 5 மாத சிறைவாசத்துக்குப் பின் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
இதேபோல், போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் மதிப்பிலான நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தினார் என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன்மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. கடந்த ஜனவரி 31-ம் தேதி அவரை கைது செய்த, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். இதனால் பிப்ரவரி 5-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து, 150 நாட்கள் கழித்து கடந்த ஜூன் 28-ம் தேதி ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
மேலும், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா சுமார் 17 மாதத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதே வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கிய நிலையில், 165 நாளுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து கவிதா வெளியே வந்தார்