என் மலர்
பாரிஸ் ஒலிம்பிக் 2024
படுக்கை அறையோடு மட்டும்தான் பாலினம்?.. சர்ச்சையான ஒலிம்பிக் நிகழ்ச்சிக்கு கங்கனா- மஸ்க் கண்டனம்
- இயேசுவின் இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் டிராக் கிவீன் நிகழ்ச்சி அமைந்தது
- அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மேசையில் மீது படுத்திருந்தார்
ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு தொடக்கவிழா அணிவகுப்பு, வாணவேடிக்கை கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டது.
அந்த வகையில் ஐபில் கோபுரத்தின் முன்னாள் சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாகப் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் 'Last Supper' எனப்படும் இயேசுவின் இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக்கொண்டு , லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் விதமாக மேஜையில் படுத்திருந்தார். மேஜைக்கு பின்னால் உணவருந்தும் பாணியில் டிராக் குவீங்கள் எனப்படும் பெண்கள் அமர்த்திருந்தனர்.
LGBTQ+ சமூகம் உட்பட அனைவரையும் பாலின சமத்துவத்தோடு கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைத்துள்ளதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சி பாலினத்தை மையப்படுத்தி விரசமான முறையில் அமைந்துள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.
குறிப்பாக வலதுசாரி சிந்தனைகளுடைய தொழிலதிபர் எலான் மஸ்க், பாஜக எம்.பி கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சிக்குக் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். கங்கனா ரனாவத் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஏன் பாலினத்தை அவரவர் படுக்கையறையோடு மட்டும் வைத்துக்கொள்ள கூடாது என்று கேள்வியெழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.