search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 World Chess Championship"

    • குகேஷ் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை.
    • விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த குகேஷ் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். இதன் மூலம் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    அவருக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சிற்பி இளஞ்செழியன் என்பவர் தர்ப்பூசணியில் குகேஷின் உருவத்தை வரைந்துள்ளார். இந்தியாவின் இளம் வயது செஸ் சாம்பியனுக்கு வாழ்த்துக்கள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.


    இதனை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இளஞ்செழியனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    இவர் ஏற்கனவே அப்துல்கலாம், இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை தர்ப்பூசணியில் செதுக்கி பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
    • வரலாற்றிலேயே இளம் சாம்பியன் ஆனார் குகேஷ்.

    18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அந்த பதிவில், "வரலாற்றிலேயே இளம் சாம்பியன் ஆனார் குகேஷ் டி," என்று குறிப்பிட்டு இந்திய தேசிய கொடி, தீ மற்றும் கைத்தட்டுவதை குறிக்கும் எமோஜிக்களை இணைத்து இருந்தது.

    உலகின் இளம் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு பிரதமர் மோடி துவங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் 2024 பட்டத்தை வெல்பவருக்கு மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 20 கோடியே 75 லட்சம் ஆகும். சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிகளின் படி வீரர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 2 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 68 லட்சம் வழங்கப்படும்.

    இதை தவிர்த்த மீதித் தொகை இரு வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். 2024 செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் குகேஷ் மூன்று (3வது, 11வது மற்றும் 14வது) போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 6 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 கோடியே 04 லட்சம் பெறுவார். இவரை எதிர்த்து விளையாடிய டிங் 1 மற்றும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 36 லட்சம் வென்றுள்ளார்.

    அந்த வகையில் மீதமுள்ள 1.5 மில்லியன் டாலர்கள் குகேஷ் மற்றும் டிங் இடையே பகிர்ந்து அளிக்கப்படும். இதில் குகேஷ் 1.35 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 கோடியே 34 லட்சமும், டிங் 1.15 மில்லியன் இந்திய மதிப்பில் ரூ. 9 கோடியே 66 லட்சமும் பெறுவார்கள் என்று தெரிகிறது. 

    • 11 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
    • இன்னும் 3 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.

    சிங்கப்பூர்:

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று 11-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.

    இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர்.
    • இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.

    சிங்கப்பூர்:

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 9 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர். முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.

    லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவையாக உள்ளது. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்வதற்கு குகேஷுக்கும் மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவைப்படுகிறது. இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.

    • மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.
    • இம்மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 15, 2024 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த தொடரில் அடுத்த இரு ஆண்டுகள் உலக செஸ் சாம்பியனாக இருக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்துவிடும். உலக செஸ் சாம்பியன் படத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் சீனாவின் டிங் லைரென் களமிறங்குகிறார்.

    மறுப்பக்கம் செஸ் வரலாற்றிலேயே இளம் வயதில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையுடன் இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளார். உலகின் அடுத்த செஸ் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளை நடத்த உலக செஸ் கூட்டமைப்பிடம் மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.

    இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் நடத்த வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசும் விண்ணப்பித்துள்ளன.

    மூன்று விண்ணப்பங்களும் அடுத்த வாரம் நடைபெறும் உலக செஸ் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும். இந்த ஆலோசனை கூட்டத்தில் விண்ணப்பதாரர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆலோசனை கூட்டத்தில் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான கேள்விகளுக்கு பிரதிநிதிகள் பதில் அளிக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் உலக செஸ் கூட்டமைப்பு சார்பில் முடிவுகள் அறிவிக்கப்படும். 

    ×