search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumavalavan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது.
    • இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

    சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இருமொழிக்கொள்கையே போதுமானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

    ஆகவே, மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது என்பது தான் நம்முடைய தமிழ்நாட்டு அரசின், தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு ஆகும்.

    ஆனால், பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் இந்தியை படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைத்துவிடும், இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

    இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குகிற உள்நோக்கத்தோடு பா.ஜ.க.வினர், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்வதை அம்பலப்படுத்துகிறோம். அதை எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது.

    சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை சில நபர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.

    யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல. அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துக் கொண்டது.

    இந்த நிலையில் வேறு எந்த கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க.வினர் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என தெரியவில்லை. இதன் மூலம் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்த அவர்கள் கருதுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    • திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா.ஜனதா பற்றியும் சனாதன தர்மம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரம் தி.மு.க. கூட்டணியில் வலுவான கட்சியாக அங்கம் வகித்திருக்கும் திருமாவளவன் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அளவில் அரசியலில் இடம்பெற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன் காரணமாகவே தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேல் உள்ளிட்டோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதே திருமாவளவன் வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு கருத்துக்களை கூட முன் வைத்தது உண்டு. அடிப்படையில் பார்த்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமாவளவன் பாடுபடுகிறார். இதற்கான முறைகளும், அர்த்தங்களும் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் பா.ஜனதாவும் இதையேதான் விரும்புகிறது.

    திருமாவளவனுக்கும் எங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது. மிக கடுமையாக விமர்சித்து கொள்கிறோம். ஆனால் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஒரே சிந்தனையுடன் தான் பயணிக்கிறோம்.

    பா.ஜனதாவில்கூட பட்டியல் இன தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களும் வட இந்தியாவில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் அவர்களை சொல்லவில்லை. திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கிறது. இந்த நிலையில் திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதும் எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்று கூறி இருப்பதும் மறைமுகமாக திருமாவளவனுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் பா.ஜனதாவில் இந்த புதிய அணுகுமுறை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

    • அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும்.
    • அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

    கடலூர்:

    கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    குஜராத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த குடும்பத்திற்கு இந்திய அரசும் குஜராத் மாநில அரசும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    இதுபோல் சம்பவம் எதிர் வருங்காலங்களில் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு நீதி விசாரணை உடனடியாக அமைக்க வேண்டும். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தமிழக ஆளுநர் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார்.

    திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. சார்பில் தெரிவிப்பது திட்டமிட்ட உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக தெரிகிறது‌.

    மத்திய அரசு பொதுவான எச்சரிக்கை அறிவித்துள்ளனர். கோவையில் நடக்க போகுது என்றோ? முஸ்லிம் நபர் இதில் ஈடுபட உள்ளார் என்றோ? யாரும் சொல்லவில்லை. மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை செயல்படவில்லை என அப்பட்டமாக அரசியல் ஆதாயம் தேடுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

    ஆனால் முதலமைச்சர் கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க உடனடியாக பரிந்துரை செய்தார்‌. கோவை வெடிப்பு சம்பந்தமாக அவதூறு பரப்பி வரும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம் .

    கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும். அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் கடலூர் மாவட்டத்தில் பாஜகவினர் காலூன்ற எண்ணுகிறார்கள். காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டி பேசி உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் காலூன்ற முடியாது. வட மாநிலத்தைப் போல் வன்முறையை தூண்டி அதன் மூலம் குளிர் காயிலும் என எண்ணுகிறார்கள்.

    தமிழகம் என்றும் சமூக நீதிக்கான மண்ணாகும். மதவாதம் அரசுக்கு அனுமதி இல்லை என தேர்தல் சமயத்தில் மக்கள் பாடம் கண்டிப்பாக புகட்டுவார்கள். நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார்.
    • தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.

    வேலூர் :

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையை தகர்க்க கூடிய ஒன்று. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர் கவர்னர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தான் கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடைவெளி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக இணைப்பு பாலமாக இருக்க வேண்டியவர் கவர்னர். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னரே தவிர, கவர்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டதல்ல மாநில அரசு. இதை உணராமல் தமிழ்நாடு கவர்னர் மட்டுமல்ல. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கவர்னர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர்.

    நளினி உள்ளிட்ட 6 பேரை சட்டப்படி விடுதலை வழங்குவதற்கு முகாந்திரம் இருந்ததாலேயே சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இதில், விமர்சிக்க ஒன்றும் இல்லை. ஆனால் மத்திய அரசு 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அல்லது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினையில் ஒரே மாதிரியான அணுகுமுறையை தான் கையாள்வார்கள் என்பதற்கு சீராய்வு மனு ஒரு சான்று. இந்த சீராய்வு மனுவால் இவர்கள் விடுவிக்கப்பட்டதை தடுக்க முடியாது.

    அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என்று அர்த்தம். ஆனால் பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று அவர் கூறினால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார் என்று கருத வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கரைய விட்டு விட்டார். கைவிட்டு விட்டார் என்று எண்ண தோன்றுகிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க. ராட்சசன் போன்று வளர்ந்து வருகிறது என்று நகைச்சுவையாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்க முயற்சி எடுக்கிறது.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் கட்சி கொடியை ஏற்றி வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    ஐ.நா.பேரவையும், சர்வதேச சமூகமும் ஈழத்தமிழர்களின் துயரை துடைக்க முன்வர வேண்டும். முள்ளிவாய்க்கால் இன படுகொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். தமிழகத்தில்அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்கமாக முயற்சி எடுக்கிறது.

    தமிழ்நாடு சமூகநீதிக்கான மண். இங்கு சனாதனத்துக்கு இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இல்லை. அது தேர்தலுடன் கலைந்து சிதறிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும் எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
    • தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க. இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன்.

    தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. நகைச்சுவை செய்து, அவர்களே சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.

    தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க. இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள். காசியில் தமிழ்சங்கம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழக மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க. தற்போது 4 குழுக்களாக சிதறி இருப்பது அவருக்கு செய்யும் துரோகம். ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் துரோகம். அ.தி.மு.க.வை உடைப்பது, அக்கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாடு திராவிட அரசியலுக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். பா.ஜ.க. அதை பயன்படுத்தும் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் காவி உடை அணிவது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

    இந்து மக்கள் கட்சியினர் அண்ணல் அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களையும் இதே போல் இழிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தினார்
    • வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது.

    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    இந்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் என்று அறிவிக்க வேண்டும். நிதி பகிர்வு செய்வதில் பதினைந்தாவது நிதிக்குழு மாநிலங்களுக்கு எவ்வாறு நிதியை பகிர்வது என்பதை குறித்து ஒரு வரையறையை தீர்மானித்து இருக்கிறது.

    2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் நிதி பகிர்வு செய்வது என்கிற வரையறையால் தமிழ்நாடு பாதிப்புகுள்ளாகி இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தான் இந்திய ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஒப்பிட்டளவிலே உத்தரபிரதேசத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் அங்கு மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தினுடைய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களுள் தமிழ்நாடு முதன்மையான மாநிலம். அதனால் மக்கள் தொகை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

    இந்த மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து ஒரு வரையறையாக வைத்து நிதி பகிர்வு என்கிற நிலையை கையாள்வதால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது.

    எனவே அதிக நிதி வருவாயை வழங்குகிற தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து டிபென்ஸ் காரிடாருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு உறுதியளித்திருக்கிறது. தமிழ்நாட்டிலே ஏற்கனவே ஆவடியில் டாங்கி தொழிற்சாலை இருக்கிறது, அதை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்த ஒன்றிய அரசு இதுவரை பட்ஜெட்டில் மிக குறைவான முறையில் அளித்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் நதிகள் இணைக்கப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒன்று ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

    வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது. கடந்த 2020ம் ஆண்டிலே 4.6 கோடி பேர் வறுமையில் புதிதாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசின் தவறாக பொருளாதார கொள்கை தான் காரணம் என்பது தெரியவருகிறது. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களில் 98 பணக்காரர்களின் சொத்து வரியிலே 4 சதவீதம் உயர்த்தினால் இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டத்தை 17 ஆண்டுகள் நடத்த முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே அவர்களுக்கான வெல்த் டாக்ஸை குறைக்காமல் வரியை வசூலிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சென்னை மதுரைக்கு இடையில் வந்தே பாரத் ரெயில் விட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    • பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு அரசியல் பிரிவு.
    • மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.

    திருச்சி:

    அரசு ஊழியர் ஊழியர் ஐக்கிய பேரவை (மத்திய, மாநில பொதுத்துறை) சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் காப்பாளருமான தொல்.திருமாவளவன் எம்.பி.யின் மணிவிழா திருச்சி கருமண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. எம்.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஏற்புரை வழங்கி பேசியதாவது:-

    காமராஜரை போல, இன்னொரு வகையில் ராகுல் காந்தியை போல ஒட்டுமொத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை போல திருமாவளவன் இந்த மண்ணிலே பணியாற்றுகிறார் என்று திருநாவுக்கரசர் என்னை பாராட்டி உள்ளார். இதில் ஒட்டுமொத்த மக்களுக்கான ஒரு தலைவர் உருவாகி இருக்கிறார் என கூறும்போது நான் பெருமைப்படுகிறேன். ஒரு நம்பிக்கையை தரக்கூடிய அளவுக்கு அனைவரின் உரையும் அமைந்திருக்கிறது.

    இன்றைக்கு இந்த மண்ணுக்கு மிகப்பெரும் ஆபத்து மதவெறியர்களால் உருவாகிறது. சனாதன சக்திகளால் உருவாகிவிட்டது. மீண்டும் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் அவர்கள் (பா.ஜனதா) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்களேயானால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். எதையும் துணிந்து செய்வார்கள்.

    அவர்களின் செயல் திட்டம் ஒவ்வொன்றாக இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவர்கள் விரும்பியதைப்போல குடியுரிமை சட்டம், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. என கொண்டு வந்து விட்டார்கள். இந்த ஆட்சி காலம் முடிவதற்குள் பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

    பல இனம், பல கலாசாரம் நிறைந்த இந்த தேசத்தில் மதச்சார்பற்ற அரசு இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு அரசியல் பிரிவு. பா.ஜ.க.வுக்கு என தனி செயல்திட்டம் எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

    ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். கொள்கை ரீதியாக பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரசுக்கு நாம் துணையாக இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
    • வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கானாத்தூர் பகுதியில் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்தவ பெருவிழா இன்று மாலை நடக்கிறது.

    விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்க செல்லும் திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

    இதில் வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், வி.ஜி.சந்தோசம் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார்.
    • எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார்.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிசம்பர் 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இயேசு பெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார். எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார். ஆட்சியாளர்களின் மக்கள்விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் இயேசுபெருமானை சிலுவையில் அறைந்து மரண தண்டனை அளித்தனர். அதனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார் இயேசுபெருமான்.

    எளியோருக்காக குருதி சிந்திய - தனது உயிரைக் கொடுத்த இயேசுபெருமான் சகோதரத்துவத்தையே உலக மாந்தருக்கான நற்செய்தியாக அளித்துச் சென்றார். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளாக மாறியிருப்பதற்கு அது போதிக்கும் சகோதரத்துவமே அடிப்படையாகும்.

    அத்தகைய சகோதரத்துவத்தை இந்திய மண்ணிலும் மலரச்செய்யவும் நிலைபெற வைக்கவும் இந்நன்னாளில் உறுதியேற்போம். சனாதனப் பாகுபாடு அரசியலை- மதவழி சிறுபான்மையினருக்கான வெறுப்பு அரசியலை மேலும் வலுப்பெறவிடாமல் தடுத்து வீழ்த்தவும் மதசார்பற்ற சனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும் இப்பெருநாளில் உறுதியேற்போம்.

    சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×