என் மலர்
நீங்கள் தேடியது "adi dravidar hostel"
- ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
- மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான நிதியை விடுவிக்காததால் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும்
பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை.
மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல
அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன்.
எனினும், தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம்
செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக
வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை
முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது
முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
விடியா திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலதில் நிதியை விடுவிக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
- விடுதி மாணவ- மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவர் விடுதி
தமிழக அரசால் நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர் களுக்கு என்று 18 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு என்று 15 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு என்று 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு என 3 விடுதிகள், முதுகலை பட்டப்படிப்பு மாணவர் களுக்கான ஒரு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டில் புதிதாக மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகள், கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாண விகள் இந்த விடுதிகளில் சேரலாம். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் 85 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.
அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி இலவசமாக வழங்கப்படும்.
இலங்கை தமிழர்
இந்த விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். 5 கிலோமீட்டர் நிபந்தனை மாணவிகளுக்கு பொருந்தாது. ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் சேர்க்கப் படுவார்கள்.
தகுதி உடைய மாணவ-மாணவி கள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட் அளவு போட்டோ 3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல் நடத்தை சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் பள்ளி விடுதிகளுக்கு நாளையும் (வியாழக்கிழமை), கல்லூரி விடுதிக்கு வருகிற 14-ந் தேதிக்குள்ளும் காப்பா ளரிடம் ஒப்படைத்துவிட்டு https://tnadw-hms.in என்ற இணைய தளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
- மாணவர்கள் நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர், கழிவறை வசதி, சமையற்கூடம், மாணவிகளின் வருகை பதிவேடு போன்றவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மாணவ-மாணவி களிடம் குறைகளை கேட்ட றிந்து கலந்துரையாடினார்.
அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-
முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பெற்றோர்களை மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.
- பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2021 மே மாதம், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, நான் ஏற்கெனவே ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள ஏழை, எளிய ஆதி திராவிடர் மாணவர்கள் அடிப்படை வசதியின்றி சொல்லொண்ணா துயரம் அனுபவித்து வருகிறார்கள் என்பதையும், பல இடங்களில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளேன்.
ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் உள்ள சுமார் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளில் சுமார் 82,500 பள்ளி மாணாக்கர்களும், சுமார் 16,500 கல்லூரி மாணாக்கர்களும் என்று சுமார் 99 ஆயிரம் மாணவ, மாணவியர் தங்கியுள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்கப்படுவதாகவும், இது தவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும், அசைவ உணவு வழங்கப்படும்போது 3-ல் 1 பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், இது போன்ற பல குறைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து வேலைகளையும் மாணவிகளை வைத்தே மேற்கொண்டு வருவதாக புகார் வந்துள்ளது.
- தங்களை அடித்து துன்புறுத்துவதாக மாணவிகள் 3 பேர் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகே கோட்டூரில் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியை சேர்ந்த மாணவிகள் தங்களது வார்டன் தங்களை அடித்து துன்புறுத்துவதாக தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.
விடுதியில் வார்டனாக இருக்கக்கூடிய சசிரேகா மற்றும் சமையலாளர் மாலதி ஆகிய இருவரும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை அடித்து துன்புறுத்தி விடுதியில் உள்ள அனைத்து வேலைகளையும் மாணவிகளை வைத்தே மேற்கொண்டு வருவதாகவும், தரமற்ற உணவுகளை கொடுப்பதாகவும், இது குறித்து வெளியில் யாரிடமும் சொன்னால் தங்களை அடித்து துன்புறுத்துவதாக மாணவிகள் 3 பேர் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.
மேலும் விடுதியை சேர்ந்த மாணவிக்கு வாயில் பச்சை மிளகாய் வைத்து சாப்பிட சொல்லி துன்புறுத்தியதாகவும், இதனால் மாணவி ஒருவர் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் கூறினர். விடுதி வார்டன் மற்றும் சமையல் அலுவலர் மீது மாணவிகள் கூறிய புகார் குறித்து விசாரணை நடத்துமாறு பெற்றோர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை பாலசுந்தரம் ரோட்டில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கர் ஆதி திராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.
இவ்விடுதியில் 174 கல்லூரி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இவ்விடுதியின் பராமரிப்பு பணிக்கென ஒரு விடுதிக் காப்பாளர், 3 சமையலர், ஒரு உதவி பணியாளர், ஒரு துப்புறவு பணியாளர் என மொத்தம் 6 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடுதியில் இன்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது விடுதியின் சமையல் அறை, மாணவர்கள் அறை, கழிப்பறை, மற்றும் விடுதி வளாகம் என ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இவ்விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக தனது பணியினை சரிவர மேற்கொள்ளாத விடுதி காப்பாளர் ஆர்.ஜெகநாதனை ‘சஸ்பெண்டு’ செய்ய கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.
மேலும், விடுதியினை முறையாக 2 நாட்களுக்குள் சீர்செய்யும்படியும், மாவட்ட கலெக்டர் ராசாமணி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். #tamilnews






