search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "artificial rain"

    • கோடைகாலத்தில் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது.
    • வீடு எப்போதும் குளுமையாக இருப்பதால், அவரது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து இளைப்பாறி விட்டு செல்கிறார்கள்.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக அடித்து வருகிறது.

    பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தினமும் வெயில் அடிக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.

    இதனால் கோடைகால தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பகலில் இருக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. மின்விசிறிகளை இயக்கினாலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் இரவில் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை அங்கு உள்ளது.

    கேரளாவில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒருவருடைய வீட்டில் மட்டும் தினமும் மழை பெய்கிறது. செயற்கை மழை பெய்வதற்கான அமைப்பை தனது வீட்டில் ஏற்படுத்தி தினமும் மழை பெய்ய செய்வதே அதற்கு காரணமாகும்.

    எச்.பி.மோட்டார், பி.வி.சி.பைப், விவசாயத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க பயன்படுத்தும் ஸ்ப்ரிங்ளர்கள் உள்ளிட்டவைகளின் மூலம் செயற்கை மழை பெய்வதற்கான ஏற்பாடுகளை தனது வீட்டில் செய்திருக்கிறார்.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வாணியம்பலம் பகுதியை சேர்ந்தவர் மன்சூர். ஏ.சி. மெக்கானிக்கான இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு யாஸ்மி என்ற மனைவியும், ஷமிலா, சாடியா, ஷனிஹா என்ற 3 மகள்களும் உள்ளனர்.

    மன்சூர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள்கள் வாணியம்பலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் மன்சூர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவரது வீடு மிகவும் சூடாக இருந்தது.

    கோடைகாலத்தில் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த மன்சூருக்கு, மோட்டார் மற்றும் பைப்புகளை பயன்படுத்தி தனது வீட்டில் செயற்கை மழை பெய்யச்செய்து குளிர்விக்கும் யோசனை வந்தது.

    அதன்படி 300 வாட் அரை எச்.பி. மோட்டார், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ஐந்து ஸ்பிரிங்ளர்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்டவைகளை வாங்கினார். தனது வீட்டின் மேற்கூரை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைப்புகளை அமைத்து அதில் ஸ்பிரிங்ளர்களை பொருத்தினார்.

    பின்பு வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் இருந்து ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்பட்டுள்ள குழாய்களுக்கு எச்.பி. மோட்டார் மூலம் தண்ணீர் சப்ளை கொடுத்தார். மோட்டார் ஆன் செய்யப்பட்டதும் ஸ்பிரிங்லர்கள் வீட்டின் மேல் பரப்பில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றன.

    ஸ்பிரிங்ளர்கள் சுற்றிக்கொண்டே தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால், வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் ஈரமாகிறது. வீட்டில் உள்ள மரங்களின் கிளைகளில் பட்டு கீழே விழும் போது மழை பெய்ததை போன்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் மன்சூரின் வீடு உள்ள பகுதி முழுவதுமாக ஈரமாகி விடுகிறது.

    அதன் காரணமாக அவரது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியாகி விடுகிறது. கோடைகாலத்திலும் அவரது வீடு மழைக்காலம் போன்று குளிர்ச்சியாக இருக்கிறது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். அவருடைய வீடு எப்போதும் குளுமையாக இருப்பதால், அவரது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து இளைப்பாறி விட்டு செல்கிறார்கள். இது பற்றி மன்சூர் கூறியிருப்பதாவது:-

    எனது வீட்டில் செயற்கை மழை பெய்யும் அமைப்பை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தேன். மோட்டார், ஸ்பிரிங்ளர்கள், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவைகளை வாங்க 3000 ரூபாயே செலவு ஏற்பட்டது. அவற்றை எனது வீட்டில் நானே நிறுவியதால், அதற்காக எனக்கு தனியாக செலவு ஆகவில்லை. தினமும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பத்து நிமிடங்கள் மோட்டார் இயக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும்.

    ஸ்பிரிங்ளர்களில் இருந்து விழும் தண்ணீர் மரங்களின் இலைகளில் பட்டு கீழே விழும் போது மழையின் உணர்வை நமக்கு தருகிறது. நமது விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் மழையை உருவாக்கலாம். இவ்வாறு தெளிக்கப்படும் தண்ணீர் வீட்டில் வளர்க்கப்படும் சப்போட்டா, கொய்யா, மா, பலா போன்ற மரங்களுக்கும், செடிகளுக்கும் செல்கிறது.

    இதனால் அவையும் செழித்து வளர்கின்றன. செயற்கை மழை பெய்யச் செய்ய தினமும் காலையும், மாலையும் சராசரியாக 250 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும். தண்ணீரை தெளிக்க மோட்டார் பயன்படுத்துவதால் மின்சார கட்டணமும் அதிகமாக வருவது இல்லை. மின்சார கட்டணம் 2000 ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது.

    ஆனால் முன்பு ஏ.சி-க்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் வந்தது. இந்த செயற்கை மழை அமைப்பை எனது வீட்டில் அமைத்த பிறகு ஏ.சி. பயன்படுத்துவதில்லை. இதனால் மின் கட்டணம் குறைந்துவிட்டது. செடிகளுக்கு என்று தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை.

    செயற்கை மழை எளிமையானது மற்றும் சக்தி வாய்ந்தது. அதற்கான கட்டமைப்பை அமைப்பதற்கான செலவும் மிகமிக குறைவு. சுற்றுலா தளங்களிலும், அணைகளுக்கு அருகிலும் இதனை அரசு திட்டமாக செயல்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது.
    • செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடுமையாக இருந்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 480-க்கு மேல் சென்றது. இன்று காலை டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 421-ஆக இருந்தது.

    இது கடுமையான பிரிவில் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். காற்று மாசை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய், நிதி மந்திரி அதிஷி ஆகியோர் ஐ.ஐ.டி. கான்பூர் குழுவுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    தற்போது ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த திட்டம் பற்றி டெல்லி அரசு சமர்பிக்க உள்ளது. கோர்ட்டு அனுமதி அளித்தால் டெல்லி, மத்திய அரசும் செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்தும். செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேக மூட்டம் வருகிற 20, 21-ந் தேதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்று செயற்கை மழையை பெய்ய வைக்கலாம் என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

    தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #MaduraiHighCourt
    மதுரை:

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும், பறவைகளும் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். 2020-ம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போர்க்கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், “மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. நம் நாட்டில் மக்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால், 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    2025-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நவீன யுத்திகளை மத்திய, மாநில அரசுகள் கையாள வேண்டும். செயற்கை மழைக்காக பல்வேறு நாடுகள் ஏராளமான நிதி செலவு செய்கின்றன. 1980-ம் ஆண்டில் தமிழகத்தில் செயற்கை மழை வரவழைக்க முயற்சி செய்யப்பட்டது“ என்றனர்.

    பின்னர் செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏன் முயற்சி செய்யக்கூடாது. குடிநீர் பற்றாக்குறையை போக்க கடலோர மாவட்டங்களில் உப்பு நீர் பாசனத்தை ஏன் ஏற்படுத்தவில்லை என்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    பின்னர் விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHighCourt
    ×