என் மலர்
நீங்கள் தேடியது "Bus facility between the hostel"
- சேலம் அரியானூர் ராக்கிபட்டியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டது.
- கல்லூரிக்கும் விடுதிக்கும் 3 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் பஸ்கள் இயக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்தனர்.
சேலம்:
சேலம் மணியனூரில் தற்காலிக கட்டிடத்தில் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சேலம் அரியானூர் ராக்கிபட்டியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டது.
அந்த கட்டிட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து அரசு சட்டக் கல்லூரி அந்த புதிய கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வசதிக்காக மாணவர்கள் விடுதி அரசு சார்பில் கட்டப்பட்டது.
ஆனால் அந்த விடுதி கல்லூரியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேவம்பாளையத்தில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் நிலையில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கல்லூரிக்கும் விடுதிக்கும் 3 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் பஸ்கள் இயக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதுவரை பஸ்கள் இயக்கப்படாத நிலையில் கல்லூரியில் இருந்து விடுதிக்கு செல்ல மாணவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் வெளியூர்களில் இருந்து தங்கி படிக்கும் மாணவர்களில் பலர் அரியானூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இதனால் மாணவர்களுக்கும் அதிக அளவில் செலவாகிறது . கல்லூரி விடுதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சட்டக் கல்லூரி விடுதியில் 20-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தங்கி உள்ளனர். 30 கோடி ரூபாய் செலவு செய்து மாணவர்கள் செல்ல பஸ் வசதி இல்லாததால் அந்த விடுதி கட்டிடம் கட்டியும் பலன் இல்லாத நிலை உள்ளது.
எனவே கல்லூரிக்கும் அந்த விடுதிக்கும் இடையே அரசு சார்பில் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடியாக கல்லூரிக்கும் விடுதிக்கும் இடையே குறிப்பிட்ட நேரம் மட்டுமாவது பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.