என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cauvery Calling"
- கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு 1.30 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது
- அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களில் வரப்போரங்களில் மரங்கள் நடலாம்.
கோவை:
உலக வன தினம் கொண்டாடப்படும் நிலையில், சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறுகையில், "நாங்கள் 2004-ம் ஆண்டு முதல் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். இதன் பயனாக, இதுவரை 8.4 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்போடு நடவு செய்துள்ளோம். 1,68,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயம் பற்றி தெரிந்துகொண்டு, அவர்களது நிலத்தில் மரங்களை நடவு செய்துள்ளனர்.
குறிப்பாக, மரம் சார்ந்த விவசாயம் மூலம் காவேரி நதியை மீட்டெடுப்பதற்காகவும், அதைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். இவ்வியக்கத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயித்து இருந்தோம்.
தமிழ்நாட்டில் சத்குரு ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் தாக்கத்தாலும், ஈஷா தன்னார்வலர்களின் செயல்பாட்டாலும் இந்த இலக்கை நாங்கள் மார்ச் 20ம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளோம். இதேபோல், கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு 1.30 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், மரம் சார்ந்த விவசாய முறையின் பயன்கள் குறித்து கூறுகையில், "அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களில் வரப்போரங்களில் மரங்கள் நடலாம். அதிக நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகள், அவர்களுடைய மொத்த நிலத்தில் குறைந்தப்பட்சம் மூன்றில் பங்கு நிலத்தில் மரங்கள் நடலாம். மேலும், நிலம் முழுவதும் மரங்களை நடவு செய்து, மற்ற பயிர்களை ஊடுபயிராகயும் சாகுபடி செய்யலாம். இவ்வாறு விவசாயிகளின் தேவைக்கேற்ப பல்வேறு விதமாக மர விவசாயம் செய்ய முடியும். மர விவசாயத்திற்கு மாறுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 3 முதல் 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுமட்டுமின்றி, மரங்களில் சமவெளில் வளரக்கூடிய மிளகு ரகங்களை சாகுபடி செய்வதின் மூலம் கூடுதல் தொடர் வருமானத்தையும் பெற முடியும். மானாவாரி விவசாய நிலங்களிலும் மர விவசாயம் செய்வதற்கான தொழில் நுட்பங்களை ஈஷா வழங்கி வருகிறது.
ஒவ்வொரு தனி விவசாயிக்கும் ஏற்ற வகையில், மண்ணுக்கேற்ற மரங்களை நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம். மேலும், விவசாயிகளுக்குத் தேவையான டிம்பர் மரக்கன்றுகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 40 ஈஷா நாற்று பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மரக்கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு மரக்கன்று 3 ரூபாய் என விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அடுத்துவரும் மழைக்காலத்துக்கு தேவையான மரக்கன்று உற்பத்திக்கான ஆயத்தப் பணிகளையும் தற்போது துவங்கியுள்ளது. மர விவசாயம் குறித்த இலவச ஆலோசனைகள் பெறுவதற்கும், மரக்கன்றுகள் பெறுவதற்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என கூறினார்.
- காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய கருத்தரங்கு சாத்தூரில் இன்று நடைபெற்றது.
- வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்தால் விவசாயிகள் நல்ல வருமானம் பார்க்கலாம் என்றார் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ.
சாத்தூர்:
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'லட்சங்களை கொட்டி தரும் மானாவாரி மரப் பயிர் சாகுபடி'என்ற தலைப்பிலான விவசாய கருத்தரங்கு சாத்தூரில் உள்ள ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நிகழ்ச்சியில் பேசியதாவது:
33 சதவீதம் பசுமை பரப்பை அடைய வேண்டும் என்பது நம்முடைய இலக்காக உள்ளது. தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பு சுமார் 24 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 3.8 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. அதை அதிகரிக்க எங்களால் முடிந்த செயல்களை நாங்கள் செய்து வருகிறோம்.
என்னுடைய சட்டமன்ற தொகுதியில் 'வனத்திற்குள் விளாத்திக்குளம்'என்ற பெயரில் 5 ஆண்டுகளில் 1 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 25 லட்சம் பனை விதைகளையும் நட உள்ளோம்.
விவசாயிகள் ஆசைக்காக மரம் வைக்காமல், வாழ்விற்காக மரம் வைக்க வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மானாவாரி மாவட்டங்களில் நெல், வாழை போன்ற மரங்களை நட்டு சிரமப்படுவதற்கு பதிலாக வேப்பமரம், நாவல், பனை கொடுக்காப்புளி போன்ற மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அவை மானாவாரியில் நன்கு வளர்ந்து நல்ல வருமானமும் தரும்.
நம் நாட்டிற்கு ஒரு நம்மாழ்வார் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நம்மாழ்வாராக உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுராம் பேசுகையில், "விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக, கிராமங்களில் ஒரு வேப்பமரம் இருக்கும். அது எவ்வித பராமரிப்பும் இன்றி தானாக நன்றாக வளர்ந்து இருக்கும். அதேசமயம், ஏக்கர் கணக்கில் வேப்ப மரங்களை நாம் வளர்க்க விரும்பினால், நாம் எதிர்பார்ப்பதை போல் தானாக வளர்ந்துவிடாது. அதற்கென்று சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் இக்கருத்தரங்கின் வல்லுநர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். மரம் வளர்ப்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது. எனவே, இந்த தொகுதியில் மரம் வளர்க்கும் பணியில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக, ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் ராமமூர்த்தி வேப்ப மரத்தில் இருந்து லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்தும், தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் 'கொடுக்காப்புளி'மர வளர்ப்பு குறித்தும் பேசினர். பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராஜன் சந்தன மர வளர்ப்பு குறித்தும், செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் குருசாமி இலுப்பை மர வளர்ப்பு குறித்தும் பேசினர்.
காவேரி கூக்குரல் இயக்கமானது மரம் சார்ந்த விவசாயம் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வியக்கம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் இதுவரை சுமார் 24 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக அனைத்து வகையான டிம்பர் மரக்கன்றுகளும் ரூ.3-க்கு விநியோகம் செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்