என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai Salem Expressway"
மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.
சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், அரசு நிலம் என்று ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்களை எல்லாம் உரியவர்களிடம் 8 வாரத்துக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்காக வருவாய் ஆவணங்களில் திருத்தம் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் பா.ம.க. வக்கீல் கே.பாலு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் 8 வழி பசுமைச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அல்லது வேறு ஏதாவது தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #AnbumaniRamadoss
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த விவசாயிகளை மல்லூர் போலீசார் அழைத்து கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர், இதையும் மீறி நிலவாரப்பட்டியில் விமல் என்பவரது விவசாய தோட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் வருகிற 14-ந்தேதி விவசாயிகள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பது என்றும், 2-வது கட்டமாக அந்தந்த பகுதியில் ஒரே இடத்தில் திரண்டு விவசாய நிலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் 8 வழிச்சாலைக்கு எதிராக ஆவேசமாக பேசினர்.
8 வழிச்சாலைக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுதொடர்பாக கோர்ட்டிலும் முறையிட்டதால் 8 வழிச்சாலை பணிக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம்.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் ஒரே வாழ்வாதாரமாக திகழும் அந்த நிலத்தையும் பறித்துக் கொண்டால் நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் யாரும் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
போலீசாரின் மிரட்டல்படி கைது செய்தாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை தொடர்ந்து போராடுவோம், ஒருபோதும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினர்.
இதனால் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. #ChennaiSalemExpressway #Farmers
சென்னை:
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையப்படுத்தப்பட உள்ள நிலத்தை தமிழக அரசு அளவு எடுத்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களது விவசாயநிலங்களை எல்லாம் அரசு கையப்படுத்த அளவிடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த திட்டத்துக்காக, குளங்கள், மரங்கள், மலைகளை அழிக்க அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.
இந்த திட்டத்தை எதிர்த்தும், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் விசாரித்தபோது, கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து, அதன் உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது என்றும் அந்த நடவடிக்கைக்கு தடை விதித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
அந்த வழக்கில், 2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலத்தை கையப்படுத்துவதற்கான சட்டத்தில், பிரிவு 105 அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த 105வது பிரிவின்படி, நெடுஞ்சாலை, அணுஉலை, ரெயில்வே போன்ற அவசர தேவைகளுக்கான திட்டங்களாக இருந்தால், சமூக பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளாமல் நேரடியாக நிலத்தை கையப்படுத்தலாம் என்று கூறுகிறது. அதனால், இந்த பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பிரிவு 105 அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இல்லை. இந்த பிரிவு சட்டவிரோதமானதும் இல்லை. இந்த பிரிவை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
தற்போது, 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 105 செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த பிரிவை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட அதிகாரிளுக்கு தடை எதுவும் ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். #GreenwayRoad #Highcourt
சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.
இத்திட்டத்திற்காக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், பாசன கிணறுகள், வீடுகள், வனப்பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 8 வழிச்சாலை தொடர்பாக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும், நீதியின் மீதான நம்பிக்கையையும், தற்காலிக நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
8 வழிச் சாலை பிரச்சனைக்காக இதுவரை போலீசார் என்னை 3 முறை கைது செய்துள்ளனர். நிலத்தை நம்பிதான் குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். 3 ஏக்கர் நிலத்தில் 8 வழி சாலைக்காக கல் பதிக்க வந்தபோது, அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதேன். ஆனாலும், போலீசை வைத்து மிரட்டி என்னுடைய நிலத்தை அளந்து, கற்கள் நட்டனர்.
இந்த நிலத்தையும், பம்பு செட்டையும் நம்பி தான் வாழ்கிறோம். இந்த நிலத்தை ரோடு போட எடுத்துக்கொண்டால், நாங்கள் செத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை. கோர்ட் தீர்ப்பு கேட்டு அழுதே விட்டேன். செத்து பிழைத்தது போல இருக்கிறது.
எங்கள் முப்பாட்டன் காலத்தில் இருந்து இந்த நிலத்தை நம்பியே இருந்திருக்கிறோம். எங்களுடைய 4 ஏக்கர் நிலத்தையும், பம்புசெட் கிணற்றையும் அளந்து, கற்கள் நட்டபோது, உயிரே போய்விடும் போல இருந்தது.
இந்த நிலம் இருந்தால், நாங்கள் மட்டுமா பிழைப்போம். எல்லோருக்கும் சோறு இந்த நிலத்தில் இருந்துதானே கிடைக்கிறது. இதை அழிக்கலாமா என கண்ணீர் விட்டோம். இப்போது, கோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
8 வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இந்த தடையை நீக்க அரசு மேல்முறையீடு செய்ய முயற்சிக்கலாம்.
எனவே, விவசாயிகளின் வேதனையை உணர்ந்து, நிரந்தரமாக தடை விதித்து கோர்ட் நீதி வழங்கும் என நம்பியிருக்கிறோம் என்றனர்.
மதுரை:
மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மதுரையில் நடைபெற்றுள்ளது.
சுமார் 600 கி.மீட்டர் தூரம் 1000 இளைஞர்கள் சைக்கிளில் சென்று அரசின் சாதனைகளை 666 வருவாய் கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து விளக்கி உள்ளனர்.
ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த இந்த சைக்கிள் பேரணி மதுரையை அடுத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்க உள்ளது. வருகிற 27-ந் தேதி சிவகங்கையில் 1000 இளைஞர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடக்கிறது. இதற்காக பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் அமைந்தது போல தமிழகத்தில் நீண்ட நாட்கள் கோரிக்கை வைக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடினர். மக்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.மு.க. அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு விட்டது.
எந்த திட்டத்துக்கும் அந்த திட்டம் வருவதற்கு முன்பே எதிர்க்கும் சிந்தனை இருக்க கூடாது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதன் சாதக, பாதகங்களை அறிந்து மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கும் தற்போது எழுந்துள்ள எதிர்ப்பு என்பது தேவையற்றது.
அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அந்த சாலையை மக்கள் பயன் படுத்தி பார்க்கட்டும். அந்த சாலை தேவையில்லாதது என்று மக்கள் அப்போது உணர்ந்தால் இந்த அரசு மக்கள் உணர்வுக்கு நிச்சயம் மதிப்பளிக்கும். எனவே அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #chennaisalemexpressway
சேலம் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 160 ஏக்கர் நிலப்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட் டது.
பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மே மாதம் 12-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
இதற்கு எதிராக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஓமலூர் போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சீமான் முன்ஜாமீன் பெற்றார்.
சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. ஓமலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சீமான் சேலம்-சென்னை 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட பாரப்பட்டி அருகே உள்ள பூமாங்கரடு பகுதிக்கு சென்று விவசாயிகளை சந்தித்தார். அப்போது அங்கு சென்ற போலீசார், விவசாயிகளை சந்திக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சீமானும் விவசாயிகளை சந்திக்காமல் செல்ல மாட்டேன் என்று கூறினார். அப்போது போலீசார் சீமானை திடீரென கைது செய்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை கைது செய்யக்கூடாது எனக்கூறி தரையில் விழுந்து அழுது புரண்டனர்.
ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சீமானை வேனில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இதனால் போலீஸ் வேனை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர்.
சீமானுடன் நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜானகி மற்றும் திருநங்கை தேவி உள்பட 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீமான் உள்ளிட்ட அனைவரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக பொதுமக்களை சந்தித்த அரசியல் பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான், ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஆகியோர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் சீமானையும் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ChennaiSalemExpressway #Seemanarrested
சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் புதிதாக 8 வழி பசுமைச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக எனக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்து கையகப்படுத்த மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.) உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த திட்டம் சட்டவிரோதமானது. சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் சூழல் குறித்து உரிய ஆய்வு செய்யாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.
அத்துடன் பாதிக்கப்படும் மக்களிடம் உரிய ஆட்சேபனைகளை பெறவில்லை. எனவே இந்த திட்டத்துக்காக எங்கள் நிலத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யவேண்டும். இந்த திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி, இத்திட்டத்தை எதிர்த்து ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் ஐகோர்ட்டு அமர்வில் (டிவிசன் பெஞ்ச்) நிலுவையில் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கையும், அந்த அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஐகோர்ட்டு அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அப்போது, 8 வழி சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் சக்திவேல் கோரிக்கை விடுத்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
இதேபோல் இந்த திட்டம் தொடர்பாக வக்கீல் சுரேஷ் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு ஏற்கனவே கிருஷ்ணகிரி மற்றும் உளுந்தூர்பேட்டை வழியாக போதுமான அளவுக்கு சாலைகள் உள்ளன. தற்போது விமான சேவையும் தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே, சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் தேவை இல்லாதது. இதற்காக அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக நிலங்களை கையகப்படுத்துகின்றனர். அவர்களுடைய செயல் சட்டவிரோதமானது.
இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் வீணாக செலவிடப்பட உள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிட்டு, அப்பணிகளை முடிக்காமல் நடைபெறும் பசுமை வழிச்சாலை திட்டப்பணிகளுக்கும், அதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
போராட்டத்தை தூண்டியதாக நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியுஸ் மானூஸ், வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சேலம்-சென்னை பசுமை வழிசாலை திட்டத்தை செயல்படுத்தினால் 16 பேரை கொல்வேன் என்ற கருத்தை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் என்பவர் சமூக வலை தளங்களில் வெளியிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வசீகரன் மீது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக மக்களை தூண்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக காரிப்பட்டி தனிப்படை போலீசார் சென்னை மதுரவாயல் சீனிவாசாநகரில் இருந்த ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரனை கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி சந்தோசம் அவரை வரும் 18-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சேலம் பாரப்பட்டி பகுதியில் நில உள் அளவீடு பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 3-ந் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 16 விவசாயிகளை போலீசார் தரதரவென இழுத்து சென்றனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று நில உள் அளவீடு பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 26), மாணிக்கம் (37) ஆகிய 2 பேர் அங்குள்ள கிணற்றில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். விடுவிக்கப்பட்ட அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பூலாவாரி பகுதியில் நில உள் அளவீடு மற்றும் மரங்கள் கணக்கீடு பணிகள் 3-வது நாளாக இன்றும் நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது.
சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமை சாலையானது ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்த சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.
இந்த சாலை அமைப்பதற்கான நிலம் சர்வே செய்யும் பணிகள், எல்லைக்கல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது, பசுமை வழிச்சாலை அமையும் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், தென்னை மரங்கள், ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பசுமை வழிச்சாலையில் நடைபெறும் அடுத்த கட்டப் பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முதுநிலைப் பொறியாளர்கள் மது பாபு, தருண் ஆகியோர் அடங்கிய குழுவினர் எருமியாம்பட்டி, மாலகபாடி உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, விவசாயிகளின் கோரிக்கைகள், அரசு கையப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது அரூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் உடனிருந்தார்.
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் வழியாக சென்னைக்கு 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள், இடிக்கப்பட உள்ளதால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.
8 வழி சாலைக்கான நிலத்தை அளவீடு செய்து கல் அமைக்கும் பணி கடந்த 18-ந்தேதி தொடங்கியது.
சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் 6-வது நாளாக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 70 மீட்டர் அகலத்தில் நில அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பசுமை சாலைக்கு நிலம் வழங்கிய ஷோபனா, பூங்கொடி, மணி மேகலை ஆகிய 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.
அதே இடத்தில் தமிழக அரசின் சார்பில் பசுமை வீடுகள் கட்டி தரப்படும் என்றும் அவர் பயனாளிகளிடம் உறுதியளித்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களில் சுமார் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் என்பதால் மிக குறைவான எண்ணிக்கையிலே வீடுகள், கட்டிடங்கள் பாதிக்கப்படும். மேலும் நில உடமைதாரர்களுக்கு போதுமான இழப்பீடு, அதாவது தங்க நாற்கர சாலை திட்டத்தின் போது வழங்கப்பட்ட இழப்பீட்டை விட புதிய நில எடுப்பு சட்டத்தின் படி குறைந்தபட்சம் இரண்டரை மடங்கில் இருந்து அதிக பட்சம் 4 மடங்கு வரை இழப்பீடு கிடைக்கும்.
தற்போதுள்ள சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதை போல பசுமை விரைவு சாலை திட்டத்தினால் பாதிப்புகள் குறையும். எனவே பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையை அறிந்து எதிர்ப்பினை கைவிட்டு திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் பசுமை வழி சாலை 36.3 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இந்த சாலையின் அகலம் 70 மீட்டர் என கணக்கிடப்பட்டு அதற்கான நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் 11 கிராமங்கள், சேலம் தெற்கு வட்டத்தில் 4 கிராமங்கள், வாழப்பாடி வட்டத்தில் 5 கிராமங்கள் என மொத்தம் 20 கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 186 ஹெக்டேர் தனியார் நிலங்கள், 46 ஹெக்டேர் அரசு புறம் போக்கு நிலங்கள், 16 ஹெக்டேர் வனப்பகுதி உள்பட காப்புக்காடு பகுதிகள் என மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தில் மரங்கள், வீடுகள், மாட்டுக் கொட்டகைகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இருந்தால் அதற்கேற்றவாறு இழப்பீடு வழங்கப்படும்.
இதுவரை 11 கிராமங்களுக்கு உட்பட்ட 845 பட்டாதாரர்களின் 194.856 ஹெக்டேர் நில அளவீடு பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த பணி விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. இதில் 10 சதவீதம் பேர் அதிக இழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அடிப்படை சந்தை மதிப்பில் இருந்து நகர் புறங்களில் குறைந்த பட்சம் 2 மடங்கும், அதிகபட்சம் 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
500 சதுர மீட்டர் அளவில் நிலம் , கான்கிரீட் வீடு மற்றும் மரங்கள் இருந்தால் அதற்கு அதிகபட்சமாக ரூ.27.5 லட்சம் வரை இழப்பீட்டு தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. மாட்டு கொட்டகை பாதிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரமும், வீடுகள் பாதிக்கப்பட்டு இடம் பெயர்பவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் பிழைப்பு ஊதியமாகவும் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மீள் குடியேற்ற உதவி தொகையாக ஒரே தவணையிலும், மேலும் இடம் பெயர உதவி தொகையாக ரூ.50 ஆயிரம், சுய தொழில் புரிபவர்கள் அல்லது கைவினைஞர்கள் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரம், மாமரம் ஒட்டுமரத்திற்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம், உள்ளூர் மரத்திற்கு அதிகபட்சமாக ரூ.13 ஆயிரம், கொய்யா மரத்திற்கு ரூ.4 ஆயிரத்து 200, நெல்லி மரத்திற்கு ரூ.4 ஆயிரம், பலா மரத்திற்கு ரூ.9600, புளிய மரத்திற்கு ரூ.9375, பாக்கு மரத்திற்கு ரூ.8477, பனை மரத்திற்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரமும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெட்டிக்கடைகளை இடமாற்றம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் உதவியும், மானிய தொழில் கடன் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க தேவையான பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு நீட்ஸ், முத்ரா, தாட்கோ உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலம் வழங்க உள்ள நபர்களில் வீடுகள் பாதிக்கப்படுவோருக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்குவதோடு அவர்கள் வீடுகள் கட்டி கொடுப்பதற்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்குவதோடு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலம் வழங்குவோருக்கு இழப்பீடு மற்றும் மறு வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதன்படி 400 தென்னை மரங்கள் உள்ள தனது தோட்டத்திற்கு இதன் மூலம் ரூ.2 கோடி இழப்பீடு கிடைக்கும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீடு புகுந்து போலீசார் மிரட்டுவதாக எனக்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை-சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோ மீட்டர் தூரம் அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேசினர்.
அப்போது பசுமை வழிச்சாலை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இடத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். அழிக்கப்படும் கிணறுகளுக்கு மாற்றாக புதிய கிணறுகள் அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைகிறது. சாலையின் அகலம் 110 மீட்டர் என முதலில் கணக்கிடப்பட்டது. தற்போது, 70 மீட்டர் அகலத்தில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 153 ஹெக்டர் நிலம், 18 ஹெக்டர் வன பரப்பு, 690 ஹெக்டர் தரிசு நிலம், 141 ஹெக்டர் விளைநிலம் உள்பட 861 ஹெக்டர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை செங்கம் தாலுகாவில் 8 கிராமங்களில் 20 கிலோ மீட்டர் தொலைவில் சர்வே முடிந்துவிட்டது. 261 சிறு விவசாயிகள், 158 குறு விவசாயிகள், 35 பெரு விவசாயிகளின் நிலங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், 20 சதவீதம் பேருக்குத்தான் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.
கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு மட்டுமின்றி, மாற்று இடம் வழங்குதல், கிணறு வெட்ட உதவி, வீடு கட்டித்தருதல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 700 விவசாயிகளிடம் கருத்து கேட்டோம். அதில் ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
பசுமைச் சாலையில் 9 இடங்களில் இணைப்பு சாலை அமையும். இந்த சாலையில் சர்வீஸ் சாலையில் சென்று சேரலாம். கையகப்படுத்தப்படும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, பதிவு செய்யப்பட்ட மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ அதில் 1½ மடங்கு இழப்பீடு வழங்கப்படும். மேலும், திட்டமிடும் காலத்தில் இருந்து 12 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.
நிலம் கையகப்படுத்தப் படும் நிலம் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் அளித்து, பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு கொடுப்போம். பாதிப்புக்கு தகுந்த இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கையகப்படுத்தும் அரிசி, பருப்பு ஆலைகளுக்கு சதுர அடிக்கு ரூ.75 ஆயிரம், கிணற்றுக்கு ஒன்றரை லட்சம், கட்டமைப்புடன் கூடிய கிணற்றுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், தென்னைக்கு ரூ.80 ஆயிரம், பனை உள்ளிட்ட மரங்களுக்கு ரூ.2 ஆயிரம், வாழைக்கு ரூ.ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிப்பு தெரிவித்து காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது 8 வழி பசுமை சாலையை எதிர்த்து அரசுக்கு எதிராக 8 வழி சாலையை அமைத்தால் 8 பேரை வெட்டி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வேன் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகானையும், பியூஷ் மானுஷையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் மன்சூர் அலிகானும், பியூஷ் மானுசும் ஜாமீன் கேட்டு ஓமலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரமேஷ் விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிப்பாடி விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் மன்சூர் அலிகான் பேசிய ஆடியோ பதிவை போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி ரமேஷ் நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பியூஷ் மானுஷ் ஓமலூர் கோர்ட்டில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சேலம்-சென்னைக்கு 8 வழி பசுமை சாலை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கூறி நடிகர் மன்சூர் அலிகான் சேலம் ஜெயிலில் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
காலை உணவை அவர் சாப்பிட மறுத்ததால் ஜெயில் அதிகாரிகள் அவரிடம் சமாதானம் செய்து வருகிறார்கள். இதனால் சேலம் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 8 வழி பசுமை சாலையை எதிர்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானையும், பியூஸ் மானுசையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானும், பியூஸ் மானுசும் ஜாமீன் கேட்டு ஓமலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தும்பிப்பாடி விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் மன்சூர் அலிகான் பேசிய ஆடியோ பதிவை போலீசார் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட்டு ரமேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே நேரம் ஓமலூர் கோர்ட்டில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையின் பேரில் பியூஸ் மானுசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்