என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "computerized"
- 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை.
- தனியார் மையங்களுக்குச்சென்று ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.
உடுமலை:
தமிழக கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு தகவல் அனுப்பப்படுவதில் இப்போது இணையதளம் மட்டுமே மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பள்ளியில் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்படுவது, மாணவர்களின் விவரங்களை கேட்பது, அரசின் அறிவிப்புகள் என அனைத்துமே ஆன்லைன் வாயிலாக, அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது.
ஆனால், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை. இதனால் மொபைல் போன்களில் தான் இப்போதைய தகவல் பரிமாற்றம் நடக்கிறது. ஆனால் மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்புவதற்கு, இவ்வசதி கட்டாயம் தேவையாக உள்ளது. குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில், இந்த வசதியில்லாததால் தனியார் மையங்களுக்குச்சென்று தான் ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.
இதனால், வகுப்புகளும் பாதிக்கப்படுகிறது. நடுநிலைப்ப ள்ளிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அத்திட்டம் அனைத்து பள்ளி களையும் சென்றடையவில்லை. மாணவர்களுக்கு நிகழ்கால எடுத்துக்காட்டுகள், ஆன்லைன் வாயிலாக வீடியோக்கள் காண்பிப்பதற்கும், அவர்களின் கல்வி தொடர்பாக செயல்படுவதற்கும், இன்டர்நெட் வசதி தேவையாக உள்ளது. தற்போது வரை ஆசிரியர்களின் மொபைல் போன்களுக்கென போடப்படும் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் பல நேரங்களில், சர்வர் பிரச்சினையால் இணைய வசதி செயல்படுவது இல்லை. எனவே பள்ளிகளில் தடையில்லா இன்டர்நெட் சேவை பெறுவதற்கும், கம்ப்யூட்டர் வசதி வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினரும், கல்வி ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக ரத்த மாதிரி கொடுக்க செல்பவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை அங்கு நிலவி வருகிறது.
- விரைவில் கணினி மூலமாக நோயாளிகளுக்கு பரிசோதனை முடிவுகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் சுமார் 1,200 -க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் அறை ஒன்று செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான நோயளிகளின் ரத்த மாதிரிகளை அவர்களது உறவினர்கள் எடுத்து சென்று பரிசோதனைக்கு கொடுப்பது வழக்கம்.
ஆனால் அந்த அறையில் 2 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிவதால் பரிசோதனைக்காக ரத்த மாதிரி கொடுக்க செல்பவர்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை அங்கு நிலவி வருகிறது.
அவ்வாறு நீண்ட வரிசையில் நின்று ரத்தம் வழங்கினாலும், பரிசோதனை முடிவுக்காக 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக நோயாளிகள், அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
அதேபோல் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியவர்களுக்கும் ரத்த பரிசோதனை முடிவு தாமதமாக வருவதால் அவர்களுக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கமுடியாத சூழ்நிலையும் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் ரத்தம் பரிசோதனை செய்வதற்கு கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, கூடுதலாக லேப் டெக்னீசியன்களை நியமிக்க வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட நேரம் காத்து நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை மாலைமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ரத்த பரிசோதனையை விரைவுப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் எடுப்ப தாக மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நெல்லை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மத்திய ரத்த ஆய்வகத்தில் முற்றிலும் தானியங்கியாக செயல்படும் ரத்த பரிசோ தனை கருவிகள் உள்ளன.
இதன் மூலம் பெறப்படும் ரத்த மற்றும் நீர் மாதிரிகள் விரைவாக மிக குறைந்த நேரத்தில் பரிசோதிக்கப்பட்டு எவ்வித காலதாமதமின்றி வழங்கப்படுகின்றன.
சில உயர்ந்த வகை பரிசோதனைகள் கல்லூரி நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, முடிவுகள் விரைவில் பெற்று வழங்கப்படுகின்றது.
டெங்கு,கொேரானா பரிசோதனை முடிவுகள் சுமார் 3 மணி நேரத்தில் வழங்கப்படுகின்றன. இது தவிர தேவையற்ற காலதாமதம் ஏதும் ஏற்படாமலிருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விரைவில் கணினி மூலமாக நோயாளிகளுக்கு பரிசோதனை முடிவுகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியின் போது கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் பேசியதாவது:-
நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு 288.91 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கியுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவடைந்துள்ளன. இத்திட்டம் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்பிக்க இயலும்.
இதன் மூலம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தடுக்கப்படும். அரசு பணியாளர்களின் பணி பதிவேடு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு உள்ளிட்டவைகள் உடனுக்குடன் பதியப்படும்.
இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை அரசு பணியாளர்களின் பணி வரலாறு முழுமையாக இத்திட்டதின் மூலம் கணினிமயமாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சென்னை கருவூல மற்றும் கணக்கு துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, கருவூலம் மற்றும் கணக்குதுறை மண் டல இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் குறித்த திறனூட்டல் பயிற்சி முகாம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் முதன்மை செயலாளரும், ஆணையருமான ஜவஹர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். முகாமில் அரசு முதன்மை செயலாளர் ஜவஹர் பேசியதாவது:-
நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்போது முடிவுற்றுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இந்த திட்டத்தை வருகிற ஆகஸ்டு மாதத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை உள்ள அரசு பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 8,374 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த, 4 நாட்கள் பயிற்சி சில பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக 2 நாட்கள் பயிற்சி கருவூல அலுவலர்களுக்கும் அளிக்க திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற 726 மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 805 மருத்துமனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்2017-18-ம் நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.82 கோடி ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.318 கோடியும், மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 4 சார்நிலை கருவூல அலுவலகங்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசின் வரவினமாக இந்த நிதியாண்டில் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.106 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக சேர்க்கப்்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கருவூலத்துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மண்டல இணை இயக்குனர் செல்வசேகர், மாவட்ட கருவூல அலுவலர் ராதா மற்றும் அனைத்து துறைகளின் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதன்முதலாக ரூ.39 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுடன் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த ஓடுதளத்தில் தான் வாகன ஓட்டும் திறன் சோதிக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சி.சி.டி.வி. கேமரா மூலமாக சாலை விதிகளை பின்பற்றி அந்த ஓடுதளத்தில் வாகனம் ஓட்டுகின்றனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.
அந்த வகையில் கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
தமிழக போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சென்று கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை அமைச்சர் பார்வையிட்டு அது செயல்படும் விதம் பற்றி கேட்டறிந்தார். மேலும் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் வாகனம் ஓட்டும் திறனை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சோதித்து பார்த்து தேர்வு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-
கரூர் மாவட்டத்திலுள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களால் மென்பொருள் மூலம் இந்த ஓட்டுனர் தேர்வுதளம் வடிவமைக்கப்பட்டிருப்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். இந்தியாவிலேயே ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் விபத்து சம்பவங்களில் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதை வைத்து பார்க்கையில் நாம் பல்வேறு வகையில் முன்னேற்ற பாதையில் சென்றாலும் சாலை விதிகளை கடைபிடிப்பதில் மோசமான நிலையிலேயே இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாகன உற்பத்தி அதிகம் இருப்பதால் 2½ கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதனால் விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழக்கின்றனர்.
எனவே நாம் இதனை சிந்தித்து பார்த்து சாலை விதிகளை கடைபிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும்.
தொழில்துறை, கல்விதுறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைந்து வரும் தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. எனவே விபத்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவு, கடந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழப்பு 6 சதவிதம் குறைந்தது. தமிழகத்தில் விபத்துகளால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானோர் 15 வயது முதல் 40 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆண்கள் தான் அதிகம். எனவே ஹெல்மெட் அணிவது, காரில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துகளை தடுக்கலாம். சாலை விபத்தினை குறைக்க அரசாங்கம் சட்டம் இயற்றலாம்.
ஆனால் தனிமனித ஒழுக்கத்துடன் ஒவ்வொருவரும் செயல்பட்டு விதிகளை பின்பற்றினால் தான் சாலை விபத்தினை குறைக்க முடியும். மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டத்தில் கூட அதை சேர்க்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையருமான சமயமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் அதிகப்படியாக வாகனங்கள் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 7,000 வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. அதிக வாகனம் உற்பத்தியும், பதிவும் உள்ளதால் சாலை விதிகளை குறைப்பதற்காக உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகிறது. சாலை விபத்தினை குறைப்பதற்காக மிக துல்லியமாக கணிக்கக்கூடிய முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டுனர்களின் திறமை நன்கு அறியப்பட்ட பிறகே உரிமம் வழங்கப்படும்.
படிப்படியாக 14 நகரங்களில் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுதளம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தில் திறமையை நிரூபித்து ஓட்டுனர் உரிமம் பெற எளிதில் தேர்வாகி விடுவோமா? என்கிற சந்தேக கண்ணோட்டத்தில் பலர் அது தொடங்கப்படுவதற்கு முன்பாகவே உரிமம் பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், போக்குவரத்து இணை ஆணையர்கள் சிவக்குமரன், வேலுச்சாமி, துணை ஆணையர் உமாசக்தி, வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன், லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்