என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Congress presidential poll"
- காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 17-ந்தேதி நடக்கிறது.
- 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல், 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
வாக்குப்பதிவு ஏற்பாடுகள்
இந்த தேர்தலில் சென்னை உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைநகரங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் 17-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும் டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்திலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஓட்டு பெட்டிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த தேர்தலில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் தங்கள் வாக்கினை சொந்த மாநிலங்களில் அல்லது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்தான் (இரண்டில் ஒன்றை அவர்கள் விருப்பபப்படி தேர்வு செய்து) செலுத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் நேற்று அறிவித்துள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஓட்டு போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமின்றி இருக்கவும், தேர்தல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை கட்சி மேலிடம் சார்பில் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
- இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.
- நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்.
சென்னை :
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த நிர்வாகியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தமிழக காங்கிரசில் உள்ள தேசிய கமிட்டி உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்பதற்காக நேற்று சென்னை வந்தார்.
சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து சசிதரூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். புத்துயிர் ஊட்டுவேன். இதுவரை அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். தனக்கு பிரசாரம் மேற்கொள்ள நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆதரவு கேட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சசிதரூர் சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார்.
- நேரு-காந்தி குடும்பம் வெளிப்படையாகவே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.
- வேட்பாளர்கள் இடையேயான கருத்து பரிமாற்றம், கட்சிக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேயுடன் நேரடியாக மோதுகிற முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கும், பா.ஜ.க. அரசு எந்திரத்தை கையாள்வதற்கும் ஏற்ற வகையில் சில முன்னுரிமை திட்டங்களை கோடிட்டு காட்டி இருக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவிவாதம் நடத்தலாம் என்ற யோசனையை திறந்த மனதுடன் ஏற்கிறேன்.
எங்களுக்கு இடையே சித்தாந்த ரீதியில் வேறுபாடுகள் இல்லை. மாறாக நாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நோக்கங்களை அடைவதற்கு எப்படி செல்ல போகிறோம் என்பதுதான் இங்கே கேள்வி.
வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கும், வாக்குப்பதிவு நாளுக்கும் இடையே ஏறத்தாழ 2½ வாரங்கள்தான் இடைவெளி உள்ளது. எனவே, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை (வாக்காளர்கள்) சென்றடைவது என்பது நடைமுறையில், பயண ரீதியில் மிகக் கடினமானது.
அந்த வகையில், ஒரு பொது மேடையில் வேட்பாளர்கள் தோன்றி கட்சிக்கான தங்களது யோசனைகளை, தொலைநோக்குப் பார்வையை ஆக்கபூர்வமான விதத்தில் பரிமாறிக்கொள்ளலாம். இது பிரதிநிதிகளுக்கு சென்றடைய வசதியாக இருக்கும்.
அதே நேரத்தில், ஓட்டு போடாதவர்களை- அதாவது மற்ற காங்கிரஸ் தொண்டர்களையும், ஊடகங்களையும், பொதுமக்களையும் இது நிச்சயமாக அதிகளவில் கவரும்.
வேட்பாளர்கள் இடையேயான கருத்து பரிமாற்றம், கட்சிக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு இங்கிலாந்தில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் போட்டியை கூறலாம். தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தலைவர் பதவிக்கு டஜனுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வெளிப்பட்டதை பார்த்தோம். அதே போன்ற ஒரு சூழலை பிரதிபலிப்பது காங்கிரஸ் கட்சியின் மீதான ஆர்வத்தை தேசிய அளவில் அதிகரிக்கும். அதிக வாக்காளர்கள் கட்சியை நோக்கி வர ஊக்குவிக்கும்.
நேரு-காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைமை பதவிக்கு வந்தால், அந்த குடும்பம் ஒரு முக்கிய இடத்தை தொடர்ந்து பிடிக்குமா என கேட்கிறீர்கள்.
நேரு-காந்தி குடும்பம் வெளிப்படையாகவே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. அது எப்போதும் தொடரும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இதயங்களில் அவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
- தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்.
புதுடெல்லி :
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல், வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.
ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. ராகுல்காந்தி இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் மேலிட விருப்பப்படி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அதை அசோக் கெலாட் மறுத்து வந்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினால், அதற்கு கட்டுப்படுவேன் என்று நேற்று அசோக் கெலாட் கூறினார். ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தவுடன் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு எல்லாமே கொடுத்துள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளாக நான் பதவியில் இருக்கிறேன். பதவி எனக்கு முக்கியம் அல்ல. கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன்.
சோனியாகாந்தி குடும்பம் மட்டுமின்றி, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் அன்பை பெற்ற அதிர்ஷ்டசாலி நான். எனவே, அவர்கள் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கூறினால், என்னால் மறுக்க முடியாது. இருந்தாலும், ராகுல்காந்தியை நிற்குமாறு கடைசியாக ஒருதடவை வலியுறுத்துவேன்.
ராஜஸ்தானிலோ அல்லது டெல்லியிலோ கட்சிக்கு பயனளிக்கும்வகையில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றுவேன். காங்கிரசை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்பேன். தலைவர் தேர்தலில் நின்றாலும், முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியும்.
நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேனா, இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். என்னால் கட்சிக்கு எங்கு பலன் கிடைக்குமோ அங்கு இருப்பேன்.
எந்த பதவியும் வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும், ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்து கொள்வேன்.
தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிடுவது பற்றி கேட்கிறீர்கள். உட்கட்சி ஜனநாயகத்துக்கு போட்டி நடப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். 10 காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆதரவு இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிட சோனியாகாந்தி அல்லது ராகுல்காந்தியின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும். வேறு எந்த கட்சியும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது இல்லை.
அதே சமயத்தில், காமராஜர் மாடல்படி, கருத்தொற்றுமை அடிப்படையில் கட்சி தலைவரை தேர்வு செய்வதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடமும் பேசி, கருத்தொற்றுமை அடிப்படையில் பொருத்தமானவரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதுதான் காமராஜர் மாடல்.
கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், தேர்தல் சரியானதுதான். தேர்தல் நடத்துவதில் இருந்து நாங்கள் ஓடவில்லை. யார் யார் போட்டியிடுவார்கள் என்று எனக்கு தெரியாது.
பாதயாத்திரைக்கு 23-ந் தேதி ஓய்வு விடப்படுகிறது. அப்போது, ராகுல்காந்தி டெல்லிக்கு சென்றால், நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர் இரண்டு, மூன்று வாரங்களாக தனது தாயாரை பார்க்கவில்லை. அவரும் மனிதர் தானே? உங்கள் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பார்க்க செல்ல மாட்டீர்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
- காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி நடக்கிறது. இதில் ராகுல் காந்தியை போட்டியிட வைப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரம் காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோரின் பெயர்கள் வலுவாக அடிபடுகின்றன.
எனினும் இந்த தகவலை கடந்த வாரம் புறந்தள்ளிய அசோக் கெலாட், ராகுல் காந்தியை கட்சித்தலைமை ஏற்பதற்கு கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என தெரிவித்தார். ஆனால் சசிதரூரோ, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இது குறித்து முடிவு செய்வேன் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அசோக் கெலாட்டை, சசிதரூர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என கருதப்படும் அசோக் கெலாட்டும், சசிதரூரும் சந்தித்து பேசியிருக்கும் விவகாரம் காங்கிரசார் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.
- அக்டோபர் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.
புதுடெல்லி :
நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் அடுத்த மாதம் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிக்கை வரும் 22-ந்தேதி வெளியாகிறது. 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் மாதம் 8-ந்தேதி கடைசி நாள். போட்டி இருந்தால் அக்டோபர் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ந்தேதி முடிவு வெளியாகும்.
இந்த தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற குரல் அந்தக் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதே போன்ற கோரிக்கையை முன் வைத்து அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோயும் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 23 தலைவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரமும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இவர்களுக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர், "கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது. வெளிப்படையாக தேர்தல் நடத்துவது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்" என கூறியது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது மறுமலர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும்.
- ஒட்டு மொத்த கட்சியும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும், இது வெளிப்படையான தேர்தல் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்திருந்தார்.
இந்த தேர்தலில் போட்டியிட அக்கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி. சசிதரூர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக மலையாள நாளிதழ் மாத்ருபூமியில் அவர் எழுதியிருந்த கட்டுரை புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
அந்த கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்பாக, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களை நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்தலை, காங்கிரஸ் தலைவர் தேர்தலுடன் அவர் ஒப்பீடு செய்துள்ளார்.
கடந்த 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தெரசா மேக்கு பதிலாக ஒரு டஜன் வேட்பாளர்கள் போட்டியிட்டதை உலகம் கண்டது என்றும், அதில் போரிஸ் ஜான்சன் முதலிடம் பிடித்தார் என்றும் சசிதரூர் கூறியுள்ளார். இது போன்ற சூழல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் உருவானால் அது கட்சியின் மீது தேசிய வாக்காளர்கள் இடையே ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்றும், புதிய தலைவரை தேர்வு செய்வது கட்சி மறுமலர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் சசிதரூர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த கட்சியும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அதனால் மிக அவசரமாக நிரப்பப்பட வேண்டிய பதவி என்பது காங்கிரஸ் தலைவர் பதவி என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் தேர்தல் தொடர்பான தமது கட்டுரையை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என்றும் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்