search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupadi Murmu"

    • கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார்.
    • கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார்.

    இந்திய கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கடந்த 2022-ம் ஆண்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

    கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.20 கோடி செலவில் இந்த கப்பல் அதிநவீன ஆட்டோமெடிக் அம்சங்களுடன் கட்டப்பட்டது. சுமார் 262.5 மீட்டர் நீளமும், 61.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் 43 ஆயிரம் டன் எடை கொண்டது. இதுவரை கட்டப்பட்ட கப்பல்களில் இதுதான் மிகப்பெரிய கடற்படை கப்பலாகும்.

    இது 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரானது. இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிறு,குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாக்கிய எந்திரங்கள், உபகரணங்கள் மூலம் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது.

    இந்த போர்க்கப்பலில் மிக் 29 கே. ரக போர் விமானம், கமோல் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்.60 ஆர். மல்டி போர் ஹெலிகாப்டர் மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் நிறுத்தி வைக்கலாம்.

    அதி நவீன வசதிகளுடன் உருவான ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பலில் நீர் மூழ்கி கப்பல் பயிற்சிகள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் புறப்படுதல், தரை இறங்குதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது.

    இந்த கப்பலில் 2,200 பெட்டிகள் உள்ளது. பெண் அதிகாரிகள், மாலுமிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 1,600 பேர் இந்த கப்பலில் தங்கி கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இக்கப்பலில் உள்ளது.

    இந்திய கடற்படையில் ஒரு மைல்கல்லாக திகழும் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதற்காக அவர் இன்று கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி முர்முவை கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர் கோவா கடற்கரையில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்க்கப்பலில் பயணம் செய்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவர் முதன் முறையாக போர் கப்பலில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார். கப்பலின் செயல்பாடுகள், சிறப்பு அம்சங்கள் குறித்து கடற்படை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

    • செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

    இந்துக்களின் புனிதப் பண்டிகையான நவராத்திரி மற்றும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய இரவு ராவணன் பொம்மையை எரிக்கும் ராம்லீலா நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அதன்பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் செங்கோட்டையில் நடக்கும் நிகழ்வுக்கு வருகை தந்தனர். இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

    இதுபோல மகாராஷ்டிரா, பீகார், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் அரசியல் தலைவர்கள் தலைமையில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    • உதய்பூர் அரண்மனைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை புரிந்தார்.
    • ஜனாதிபதியின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளனர்.

    அக்டோபர் 3 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்குச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் உதய்பூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.

    அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் லக்ஷ்யராஜ் சிங் மேவார் மற்றும் அவரது மனைவி நிவ்ரிதி குமாரி, ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று அரண்மனையின் வரலாறு மற்றும் மரபுகளை விளக்கினர். ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பாக்டே, துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் உடன் இருந்தனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜ்சமந்த் தொகுதி எம்பி மஹிமா குமாரி மேவார் மற்றும் அவரது கணவரும் நாத்வாரா எம்எல்ஏ விஸ்வராஜ் சிங் மேவார் ஆகிய 2 பாஜக பிரதிநிதிகளும் திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை விமர்சித்துள்ளனர்.

    அரண்மனையின் சொத்து தகராறு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அரண்மனைக்கு ஜனாதிபதி வந்தது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பேசிய மஹிமா குமாரி மேவார், "அரண்மனையின் சொத்து தகராறு தொடர்பாக ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து அவரது வருகையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். ஆனாலும் அவர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க உதய்பூர் மாவட்ட ஆட்சியரைதொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை" என்று தெரிவித்தார்.

    ஜனாதிபதியின் வருகை தனிப்பட்ட முறையிலானது என்றும் இதில் மாவட்ட நிர்வாகம் தலையிடவில்லை என்றும் உதய்பூர் ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் விளக்கம் அளித்தார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இது குறித்த பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றார். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.



    "சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், பின்தொடர்வோருடனும் உள்ளன, ஓம் சாந்தி," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

    ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்த பதிவில், "பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் பாரா ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பர்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல தடைகளைத் தாண்டி, பாராலிம்பிக்ஸில் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இன்னும் பெரிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்," என திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

    "மிகவும் மறக்கமுடியாத விளையாட்டு திறன் மற்றும் ஒரு சிறப்பான பதக்கம்!

    பாராலிம்பிக்ஸில் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் கபில் பார்மருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பாராலிம்பிக்ஸ்2024ல் ஆடவருக்கான 60கிலோ J1 போட்டியில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்! அவருடைய முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • ரக்ஷா பந்தன் சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது.
    • ரக்ஷா பந்தன் அனைவரின் உறவுகளிலும் புதிய இனிமையையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்.

    ரக்ஷா பந்தன் சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான உறவை கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ரக்ஷா பந்தனின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சகோதர, சகோதரிகளுக்கிடையேயான அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான ரக்ஷா பந்தன் விழா, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது. இந்த பண்டிகை நாளில், நமது சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்ய அனைத்து நாட்டு மக்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,

    அண்ணன்-சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள்.

    இந்த புனித பண்டிகை உங்கள் அனைவரின் உறவுகளிலும் புதிய இனிமையையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ரக்ஷா பந்தன் தினமான இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டார் பகுதியின் எல்லைக்கோட்டிலுள்ள சோனி கிராமத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உள்ளூர்வாசிகள் 'ராக்கி' கட்டி இனிப்பு வழங்கினர்.

    • நீரஜ் சோப்ரா எதிர்கால வீரர்களுக்கு ஊக்கமாக இருப்பார்.
    • நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களை வென்று கொடுப்பார்.

    ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2 ஆவது இடம் பிடித்தார். இதனால் இந்தியாவுக்கு ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை. மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்கி நம் தேசத்தை பெருமை கொள்ள செய்வதற்கு அவர் ஊக்கமாக இருப்பார்," என பதிவிட்டுள்ளார்.


    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அவர். அவரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்கள் மற்றும் பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுத் தருவார் என இந்தியா எதிர்நோக்குகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    • 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு திரவுபதி முர்மு பயணம்.
    • டிமோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி செல்வது இதுவே முதல் முறை.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2 நாள் பயணமாக வருகிற 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அங்கு அந்நாட்டு அதிபர் கேடோனிவிர், பிரதமர் சிட்டி வேனி ரபுகா ஆகி யோரை ஜனாதிபதி முர்மு சந்திப்பார். அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்.

    இதைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து செல்ல உள்ளார்.

    இந்த பயணத்தில் அந்நாட்டு கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகி யோரை ஜனாதிபதி திரவு பதி முர்மு சந்திக்க உள்ளார். அங்கு நடைபெறும் கல்வி மாநாட்டிலும் அவர் உரையாற்ற உள்ளார்.

    அதன் பின்னர் 2 நாள் பயணமாக வருகிற 10-ந்தேதி தென்கிழக்கு ஆசிய நாடான டி மோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணிக்க உள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஜோஸ்ர மோஸ் ஹோர்டா, பிரதமர் கே ரலா சனானா குஸ்மாவ் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    3 நாடுகளிலும் இந்திய வம்சாவளியினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாட உள்ளார்.

    ஜனாதிபதி ஒருவர் பிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல் முறை. ஜனாதிபதியின் இந்த பயணம் 3 நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தி ஊக்கமளிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. நள்ளிரவு முதலே வெற்றிக் கொண்டாட்டங்கள் கலை கட்டிவரும் நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணி வீரர்களுக்கு மோடி வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், 'ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக இந்த பிரமாண்ட வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களில் அபாரமான ஆட்டத்தால் 1.40 கோடி இந்தியர்களை பெருமைப்பட வைத்துளீர்கள். உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்களின் மனதையும் நீங்கள் வென்றுளீர்கள். இந்த சிறப்பான தருணம் என்றும் நினைவுகூறப்டும். இது சாதாரணமான விஷயம் அல்ல. ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறியுளீர்கள். எனது சார்பாக உங்களுக்கு அளப்பரிய வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை இந்திய வீரர்களுக்கு தொலைபேசியிலும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மோடி.

    இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், 'டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான சூழல்களில் தளராத மன உறுதியுடன் ஆட்டம் முழுதும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது ஒரு சிறந்த வெற்றி' என்று தெரிவித்துள்ளார்.

    எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், 'இந்திய அணி தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சூர்யா, என்ன ஒரு அருமையான கேட்ச், ரோகித், இது உங்கள் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி, ராகுல், இனி உங்களின் வழிகாட்டுதலை இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும், மென் இன் ப்ளூ [இந்திய வீரர்கள்] நீங்கள் நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடருடன் டி20 யில் ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கும் நீங்கள் வாழ்த்து தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்த்து செய்தியில், 'இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள், குறிப்பாக விராட் கோலி, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங் தனித்துவமாக விளையாடினார்கள். ஒவ்வொரு இந்தியனும் இந்த வெற்றியை நினைத்து பெருமைப் படுகின்றனர். உங்களின் சாதனைகள் என்றென்றும் கொண்டாடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்து செய்தியில், 'இந்தியாவுக்கு ஒரு சிறப்பான தருணம் இது, தொடர் முழுவதும் அணி வீரர்கள் குழுவாக தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தேசம் உங்களின் இந்த வரலாற்று வெற்றியால் பூரிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்து செய்தியில், 'இந்த வெற்றி வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். மொத்த நாடும் இந்த வெற்றியால் உச்சத்துக்கு சென்றுள்ளது. அணி வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ , தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    • சுற்றுலா வேன் அல்க்நந்தா ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

    அலக்நந்தா ஆற்றுப்பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    • இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்கிறார்.
    • எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்துஇன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.7.15 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெறுகிறார். முன்னதாக 1952, 1957,1962 ஆகிய வருடங்களில் நேரு மூன்று முறை தொடர்ந்து பிரதமரானார்.

     

    இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அஹமத் அபிஃப், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உட்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

     

    மேலும் ரஜினிகாந்த் உட்பட இந்திய திரை பிரபலங்களும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிகிறது. மொத்தம் 8000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளது. 

    இன்றைய நிகழ்வில் பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில் இன்று பதியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    • மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
    • இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல்

    மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 பேர் படு காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.

    நேற்று (ஜூன் 2) இரவு ராய்கரில் உள்ள பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்த்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் பலர் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், ஜேசிபி இயந்திரத்தின் உதவிவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 145 பேரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஒருவர் கூறுகையில், டிராக்டரில் அளவுக்கு அதிகமான நபர்கள் அமர்ந்திருந்தந்தாலும் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறினார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமைத்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

     

    ×