search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaja Storm affect"

    புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். மின் இணைப்பை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


    புயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்குகள் கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    அதை தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும், பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 5-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கஜா புயலில் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.

    இதுவரை 97 ஆயிரத்து 200 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக மின் விநியோகம் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்று கூறி அரசின் நிவாரண பொருட்களை திருப்பி அனுப்புவதாக தகவல் வந்துள்ளது. ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண பொருட்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புகைப்பட ஆதாரம் இல்லை என்று கூறி நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பாதிப்பு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #GajaCyclone #GajaCycloneRelief

    திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிப்பால் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமம் ரயிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரரவி (வயது52). இவருக்கு மரகதவள்ளி (43) என்ற மனைவியும், துர்காதேவி(23), கார்த்திகா(19) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    வீரரவிக்கு சொந்தமாக உள்ள கொல்லையில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அன்று கஜா புயலில் வீரரவியின் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீர ரவி தனதுகுடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார்.

    இந்த நிலையில் தென்னை மரங்கள் போய் விட்டதே. இனி என்ன செய்ய போகிறேன் என்று தெரிய வில்லையே என்று வீரரவி வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்

    இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தை 2 தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தென்னை விவசாயி மாரடைப்பால் இறந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Gajastorm

    கஜா புயல் பாதிப்பை தி.மு.க. அரசியலாக்கவில்லை என துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Gajastorm #Storm #DuraiMurugan

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு எதிர்கட்சி துணை தலைவரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பயிர், கால்நடைகள், வீடுகள் சேதத்தால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதை சரிசெய்ய எவ்வளவு நிதி தேவைப்படும், மக்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை எல்லாம் அமைத்து தர எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை கணக்கீடு செய்வது என்பது சாதாரணமான வேலையில்லை.


    அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். ஒட்டுமொத்த கணக்கீடு குறித்து தலைமை செயலாளரோ, வருவாய்த்துறை செயலாளரோ சேத மதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இவைகளை எல்லாம் கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பானியாக தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது.

    மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது. ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை. தற்போது வீசிய புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதி மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். தமிழகத்தை பிரதமரோ, மத்திய உள்துறை மந்திரியோ, நிதி மந்திரியோ எட்டிக்கூட பார்க்கவில்லை. மத்திய அரசுக்கு தமிழகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை.

    நிவாரண நிதி கேட்பதை தமிழக அரசு தைரியமாக கேட்க வேண்டும். கஜா புயலை தி.மு.க. அரசியலாக்கவில்லை. பாதிப்பு இடங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் முதலில் சென்று பார்வையிட்டார். ஆனால் முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்து விட்டு வந்துவிட்டார். அவர் கீழே இறங்கி நடந்து சென்று பார்த்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #Storm #DuraiMurugan

    ×