search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Greenway road"

    பசுமை வழி சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏவை தாக்கியதாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Greenwayroad
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதற்கான நில அளவீடு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த நில உரிமையாளர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ்மானூஸ், மாணவி வளர்மதி, அரசியல் கட்சி பிரமுகர்கள் முத்துக்குமார், மாரிமுத்து உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே 8 வழி சாலைக்கு எதிராக பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழி சாலைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும் அதனை எதிர்த்து போராடிய போது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர் காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா, சவுந்தர் ஆகியோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கையும் நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.

    அப்போது இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்த போலீசாரின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொது மக்களை கைது செய்த போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதனால் விரைவில் இது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தன்னை தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் செங்கம் கரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி எனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது செங்கம் டி.எஸ்.பி.யாக இருந்த சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    மேலும் 8 வழி சாலைக்கு எதிராக போராடியதாக கூறி என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். என் மீது பொய் வழக்கும் போட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி ஆகிய 3 பேரும் டிசம்பர் மாதம் 12-ந் தேதி மாநில மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #Greenwayroad
    செங்கத்தில் அரசுக்கு எதிராக போராடியதாக 14 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. #greenwayroad
    செங்கம்:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி செங்கம் மேல்வணக்கம்பாடி காந்திநகரை சேர்ந்த சேகர் என்ற விவசாயி தன்னுடைய நிலம் கைப்பற்றப்பட்டதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், செங்கம் தாலுகாவிற்குட்பட்ட நீப்பந்துறை முதல் நயம்பாடி வரை 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சேகருக்கு அஞ்சலி செலுத்தி பசுமை சாலை பணியை நிறுத்தக்கோரி ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது.

    இதையறிந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கம் தாலுகா முறையாறு பகுதியை சேர்ந்த விவசாயி கருணாநிதி (55), மண்மலை இளங்கோ (45), அத்திப்பாடி செல்வராஜ் (50) மற்றும் புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் ஆகியோர் உள்பட மொத்தம் 14 விவசாயிகளை வீடு புகுந்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

    மேலும் கரியமங்கலம், நீப்பந்துறை, கட்டமடுவு உள்பட பல்வேறு கிராமங்களிலும் போலீசார் நள்ளிரவு முதல் விடிய, விடிய விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று கதவை தட்டி கைது செய்வதாக கூறி தொந்தரவு செய்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் போலீசாருக்கு பயந்து ஊரை விட்டு வெளியே சென்று தலைமறைவாகினர்.

    கைது செய்யப்பட்ட விவசாயிகளில் செல்வராஜ் என்பவர் தர்மபுரி மாவட்டம் ஆத்திப்பாடியை சேர்ந்தவர். இவருடைய நிலம், செங்கம் பகுதியில் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 14 பேர் மீதும் அரசுக்கு எதிராக போராடியதாக 151-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். செங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்ட 14 விவசாயிகளையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர். அவர்களிடம் 8 வழிச்சாலைக்கு எதிராக நடைப்பயணம், பேரணி, போராட்டம் என ஈடுபட்டால் அதிகபட்ச நடவடிக்கை பாயும் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுப்பற்றி விவசாயிகள் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பாதிப்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், விவசாயிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

    நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த எங்களை நள்ளிரவில் கைது செய்வதற்கு நாங்கள் தேச விரோதிகளா? என்று குமுறினர்.

    இதற்கிடையே, செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான போலீசார் விவசாயிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் காணப்படுகிறது. #greenwayroad
    சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Thirumavalavan #VCK
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 277 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த சேலம் மாநகர போலீசில் கட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்கப்பட்டது.

    ஆனால் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

    இதையடுத்து இன்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் 8 வழி சாலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். #Thirumavalavan #VCK
    சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் திட்ட இயக்குனர் ஐகோர்ட்டில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக வெளிவந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்களும் பல்வேறு விளக்கங்கள் கொடுத்த போதிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதை ஏற்பதாக இல்லை.

    இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்படாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் தருமபுரியைச் சேர்ந்த நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு குறித்து இன்று தனது பதில் மனுவை சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே இந்த சாலைத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டத்தின் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் அளவிலான எரிபொருள் செலவை குறைக்க முடியும் என்றும், அவசரக்காலங்களில் திருவண்ணாமலை, தருமபுரி மக்கள் சென்னை செல்ல இந்த சாலை உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சென்னை சேலம் இடையேயான பசுமை வழிச்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தனது பதில் மனுவில் திட்ட இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
    சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு எதிராக கருத்து கூறியதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்தார். #GreenwayRoad #thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலத்தில் இருந்து சென்னை வரை 8 வழி சாலைக்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தியோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோ, கைது செய்தோ ஒரு திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்க கூடாது. மக்களின் சம்மதம் பெற உரிய நஷ்டஈடு வழங்கி, அதை மக்கள் ஏற்றுக்கொண்டு நிலத்தை கொடுத்தால்தான் செய்ய வேண்டும்.

    பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களை அச்சுறுத்தி நிலத்தை கையகப்படுத்துவது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். மக்களுக்கான திட்டங்கள்தான் இருக்க வேண்டும். திட்டங்களுக்காக மக்கள் இருக்கக்கூடாது. மக்கள் சம்மதம் இன்றி கட்டாயப்படுத்தி திட்டத்தை திணிக்கக்கூடாது.

    இந்த 8 வழி சாலைக்கு எதிராக கருத்து சொன்னதற்காக கைது செய்யப்படுவது பாசிச போக்கு ஆகும். இது கருத்து சுதந்திரத்தை நெரிக்க கூடிய செயலாகும். எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    நீட் தேர்வினால் வட மாநிலத்தினர் அதிகமாக தேர்வு செய்யப்படுவது வருத்தப்படக்கூடியது. இதனால்தான் நீட் தேர்வு வேண்டாம், அதை சில காலம்வரை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    லோக் அயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்க கொண்டு வரப்படும் சட்டமாகும். இதில் கட்சிகள் பிரச்சினை அல்ல. அரசு அதிகாரத்தில் ஊழல் செய்பவர்கள் பயப்படவேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenwayRoad #thirunavukkarasar
    பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் தேசதுரோகிகள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். #Greenwayroad #MinisterPandiarajan

    ராயபுரம்:

    வட சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மீட்பு வெற்றி பொதுக் கூட்டம் கொருக்குப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தங்கத்தமிழ்செல்வன் வீரத்தை பாராட்டுகிறேன். வெகு விரைவில் ஆண்டிப்பட்டியில் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு வழி வகுத்த தங்கத் தமிழ் செல்வனுக்கு நன்றி.

     


    பசுமை வழி சாலை திட்டம் மத்திய அரசிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் கோடி நிதி பெற்று செயல்படுத்தபடும் மிக பெரிய திட்டமாகும். இந்த திட்டம் மிக பெரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவது உண்மை இல்லை அவர்களை திசை திருப்பி தூண்டி விடுவது மிக பெரிய தேசதுரோகம்.

    தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் ஆர்.கே நகரில் விரைவில் இடைதேர்தல் வரும். ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று கொடுத்த வாக்குகுறுதிகளை நிறைவேற்றும்.

    தினகரன் ஆர்.கே நகர் வருவதில்லை என்பதை விட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை என்பதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நடிகர் ராம ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #Greenwayroad #MinisterPandiarajan

    பசுமை வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மாவட்டங்களில், மக்களை சந்தித்து 26, 27-ந் தேதிகளில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்க இருப்பதாக ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். #Ramadoss #GreenwayRoad
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், சென்னையில் இருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக 3-வது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவைதவிர மாநில சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்திற்கு புதிதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா ஆகும்.

    பசுமைவழி சாலையை எதிர்ப் பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிசெய்பவர்கள் கூறுவது கேலிக்கூத்தானது. பா.ம.க. வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசுமைச் சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும்.



    இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை பா.ம.க. நடத்தவுள்ளது. பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார் கள். இந்த நிகழ்ச் சிகள் நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #GreenwayRoad
    சேலம்-சென்னை 8 வழிச்சாலையை மாற்று வழியில் செயல்படுத்த அரசு சிந்திக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், போராடுபவர்களை கைது செய்வதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைவதால் அழியும் பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களைக் காக்க போராடும் விவசாயிகளை நசுக்கி, அவர்களின் நியாயத்தை புறந்தள்ளிவிட்டு, இந்த அரசு அமைக்கப்போகும் விவசாயிகளின் வேதனை வழிச்சாலையை அமைக்கும் முயற்சியை எடப்பாடி பழனிசாமியின் அரசு தொடங்கியுள்ளது.

    இத்திட்டத்தை எதிர்த்து பேசுபவர்களையும், சமூக ஆர்வலர்களையும், போராடும் விவசாயிகளையும் கைது செய்யும் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை இந்த அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் இத்திட்டத்திற்கான மாற்று வழியை இந்த அரசு சிந்திக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரயோஜனப்படும் என்று பரவலாக மக்கள் கருதுகின்றனர். விவசாயத்தை தாரை வார்த்துக்கொண்டிருந்தால் பின்பு உணவுக்கு என்ன செய்வோம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். விவசாயத்திற்கு உதவும் அல்லது விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வளர்ச்சி மட்டுமே தமிழகத்திற்கு தேவை என்பதை எடப்பாடி பழனிசாமியின் அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இதனை உணராமல் ஆணவத்தோடு இந்த அரசு செயல்படுமேயானால் தமிழகத்தின் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பதை ஒரு மக்கள் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்று நான் எச்சரிக்கிறேன். இயற்கை வளங்களை சேதப்படுத்தாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாற்று வழி முறையை சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran
    ×