என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Herd of elephants"
- மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.
- குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன.
வடவள்ளி:
கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஓபி காலனியை சேர்ந்த குமார் என்பவர் யானை தாக்கி பலியானார்.
யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், பக்தர்கள் மருதமலைக்கு செல்லும் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை.
மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.
அப்போது குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன. இதனை அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி செல்போனில் வீடியோ எடுத்தனர்.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்
குடியாத்தம்:
குடியாத்தம், அடுத்த வி.டி.பாளையம், டி.பி. பாளையம் கிராமங்கள் ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது.கடந்த சில நாட்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 5 யானைகள் கொண்ட கூட்டம் வி.டி.பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டு பிளிறியபடி இருந்தது.
இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வெளியில் வர பயந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.அந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது.
விவசாயி பாபுவின் ஏராளமான மாமரங்கள், விவசாயி கோவிந்தசாமியின் கேழ்வரகு பயிர்களை நாசம் செய்தது.
பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்கள் விவசாயிகள் துணையுடன் யானைகளை பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் அடர்ந்த ஆந்திர காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
அடிக்கடி இப்பகுதிக்குள் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மாலை நேரத்திலேயே கிராம மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில் பல மாதங்களாக யானைகள் தொல்லை இல்லாமல் இருந்தது. ஆந்திர மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டு இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள தமிழக பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
யானைகளை அடர்ந்த ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்படாவிட்டால் இப்பகுதி விவசாயிகள் அரசியல் கட்சிகள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபடவும், உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.