search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in water level of Nellai"

    • இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, மூலக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பை உள்ளிட்ட இடங்களில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மாநகரிலும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று வரை 2800 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு வரை சுமார் 18 மில்லிமீட்டர் மழை கொட்டியதால் இன்று காலை நீர் வரத்து அதிகரித்து 4912 கனஅடியாக உள்ளது.

    அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் 6 அடி உயர்ந்து 97.15 அடியை எட்டியுள்ளது. சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் ஓரிரு நாட்களில் அணை கொள்ளளவு 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 7 அடி உயர்ந்து 112.53 அடியை எட்டியுள்ளது.

    கடந்த 2 நாட்களில் அணை நீர் இருப்பு சுமார் 13 அடி அதிகரித்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1033 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 2 அடி மட்டுமே நீர் தேவைப்படுகிறது. 52.50 அடி கொண்ட அந்த அணையில் 50.50 அடி நீர் இருப்பு உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 12.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், கார் பருவ சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வழக்கத்திற்கு மாறாக விரைவாகவே பாளை யங்கால்வாய் வரையிலும் வந்து சேர்ந்துவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணியை தொடங்கி உள்ளனர்.

    வழக்கமாக பாளை யங்கால்வாய்க்கு தாமதமாக தண்ணீர் வரும். இதனால் ஒரு போகம் மட்டுமே நெல் விளைவிக்க முடியும். ஆனால் இந்த முறை 2 போகம் நெல் விளையும் என்பதால் விவசாயிகள் துரிதமாக நடவு பணி செய்து வருகின்றனர்.

    மாநகரை கடந்து ஏராளமான பகுதிகளில் தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பண்படுத்தும் உழவு பணி முழுவீச்சில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு பணிகள் நடந்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வேகம் எடுத்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பால் அவற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 57 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 172 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து இன்று 74 அடியாக உள்ளது. அந்த அணையில் இருந்து விவசாயத்திற்காக 60 கனஅடி நீர் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு 136 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36 அடியை எட்டி 2-வது நாளாக நிரம்பி வழிகிறது.

    மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 85 அடியை எட்டியுள்ளது. நேற்று 80 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. குண்டாறு, அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தலா 20 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 26.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சிவகிரியில் 8 மில்லிமீட்டரும், தென்காசி யில் 7.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் கார் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    ×