என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madurai Kamaraj University"
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
- மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் சங்கீதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து காரில் புறப்பட்டு பல்கலைக்கழகம் நோக்கி சென்றார். முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நூற்றாண்டை கடந்தவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 18 மற்றும் செப்டம்பர் 20-ந்தேதிகளில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.
அதனை கவர்னர் நிராகரித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கவர்னருக்கு எதிராக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் இன்று மதுரை வரும் அவருக்கு கருப்புக் கொடி காட்ட இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.
முன்னதாக சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்ததால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி அறிவித்துள்ளார். இதனால் மதுரையில் இன்று பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து கவர்னர் பயணம் செய்யும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த நான்கு வழிச்சாலையான கீழக்குயில்குடி பகுதியில் திரண்டு நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்புக்கொடிகளை உயர்த்திப்பிடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை கவர்னரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு உருவானது.
அப்போது இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட வேண்டும், மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதை கைவிட வேண்டும், மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 பேருந்துகளில் ஏற்றி அழைத்து சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின்னர் கவர்னர் அந்த பகுதியை கடந்து பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
- தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார்.
- இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழ் இலக்கியத்தை மேற்கோள் காட்டி பிரதமர் தமது உரையை தொடங்கினார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியார் இருக்கை தொடங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
உலகம் முழுவதும் இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கிறார். அனைவரும் தாய்மொழியில் கற்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் தமிழ் போன்ற மாநில மொழிகள் உட்பட தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரகாசிக்கின்ற இளம் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம். அவர்கள் இந்தியாவை உலக அளவில் முன்னேற்றுவார்கள். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.
கொரோனா நெருக்கடியிலிருந்து பல நாடுகள் மீளமுடியாத நிலையில், இந்தியா இதிலிருந்து மீண்டு வந்திருப்பதோடு இதுவரை நாட்டில் கட்டணமில்லாமல் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல.
- பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக மத்திய இணை மந்திரி முருகன் பங்கற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல என்றார். பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிற நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்கு பல்கலைக் கழக நிர்வாகமே முழுப் பொறுப்பு. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் எதிர்காலக் கடமைகளை உணர்த்தி நல்ல செய்திகளை சொல்லும் நிகழ்வாக பட்டமளிப்பு விழா உரைகள் இருக்க வேண்டும்.
அத்தகைய பட்டமளிப்பு விழா மேடைகளை அரசியல் களமாக, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பேசும் அரங்கமாக தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் மாற்றி வருவது பட்டமளிப்பு விழா பேச்சு மரபை மீறும் செயலாக அமைந்துள்ளது.
துணை வேந்தர் தேடுதலில் மாநில அரசை எவ்வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர் அலுவலகம். தற்பொழுது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களின் அழைப்பிதழ் தயாரிப்பதிலும் தலையிட்டு மரபுகள் மீறப்பட்டுள்ளது.
வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் என்ற நிர்வாக ஏற்பாட்டில், விழாவிற்கு அழைக்கப்படும் வேந்தர், இணை வேந்தர் ஆகியோரே வரிசைப் படி இறுதியில் பேசுவது மரபு முறையாகும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவர், வாழ்த்துரை வழங்க அழைக்கப்படுபவர் முதலில் பேசுவதே மரபு ஆகும்.
ஆனால் தற்போது அந்த மரபு மீறப்பட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டுள்ளது. இணை வேந்தருக்கு பிறகு கௌரவ விருந்தினர் அதன் பிறகு இறுதியாக வேந்தர் என்று அமைந்துள்ளது.
இது முற்றிலும் மரபு மற்றும் விதிகளுக்கு முரணாக உள்ளது. கௌரவ அழைப்பாளர் ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் அவர் மரபு படி முதலில்தான் பேச வேண்டும். பல்கலைக்கழக விதிகளின்படி Chancellor அடுத்து Pro-Chancellor ஆவார்.
அதன் அடிப்படையிலேயே நிமிடத்திற்கு நிமிட நிகழ்வு (Minutes tominutes ) தயாரிக்கப்பட வேண்டும். இது மரபு மீறும் செயல் மட்டும் அல்லாமல் ஆளுநர் அலுவலகம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் கூட தலையிடத் தொடங்கி உள்ளதை வெளிப்படுத்துகிறது.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு உள்ளதால் மரபை பின்பற்றி இறுதியாக இணை வேந்தர் அதன் பின்னர் வேந்தர் என்று நிகழ்ச்சி நிரலை முறைப்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.
பட்டமளிப்பு விழா நிமிடத்திற்கு நிமிட நிகழ்வில் உள்ள குறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் வழியாக ஆளுநர் அலுவலகத்திற்கு சுட்டிக் காட்டியும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப் படாததால் இப்பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
- விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு, கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடந்தது.
மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தொலைநிலைக் கல்வியின் கூடுதல் தேர்வாணையரின் அலுவலக கண்காணிப்பாளர் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு ஆய்வு செய்ய சென்றபோது, விடைத்தாள் கட்டுகள் சிதறிக்கிடந்தன. உடனடியாக துணைவேந்தர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரணை நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆடு மேய்ப்பவர்கள் விடைத்தாள் கட்டுகளை திருடிச் சென்று இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் சார்பில் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் ராஜம்பாடியில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் விடைத்தாள்களை சிலர் எடைக்கு போட்டு சென்றது தெரியவந்தது.
அந்த விடைத்தாள் கட்டுகள் ஆலம்பட்டியில் செயல்படும் ஒரு பழைய பேப்பர் கடைக்கு அனுப்பட்டு, அதன் பின்னர் மதுரை வீரகனூரில் உள்ள மொத்த பேப்பர் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது விடைத்தாள் கட்டுகளை ரோட்டோரம் கண்டெடுத்து அதனை கடையில் போட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் அதிகாரிகள் தூண்டுதல் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அது திணிக்கப்படுவது சமூக அநீதியாகும்.
- இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு ஏதோ ஒரு வகையில் நிதியுதவி வழங்குகிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் (எம்.எஸ்.சி-பயோ டெக்னாலஜி) படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அது திணிக்கப்படுவது சமூக அநீதியாகும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக் கழகங்களுக்கு தமிழக அரசு தான் நிதியுதவி வழங்கி வருகிறது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியில் ஒரு படிப்பு நடத்தப்படுகிறது என்பதாலேயே, அந்த படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு ஏதோ ஒரு வகையில் நிதியுதவி வழங்குகிறது. அதற்காக அந்தப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இந்த சமூகநீதிக்கு எதிரான செயலை தமிழக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது என்பது தான் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு காமராசர் பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளுக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் செல்லதுரை நியமிக்கப்பட்டார். அவர் நியமனத்தில் தவறு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை நீக்கம் செய்து கடந்த ஜூன் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதன்பிறகு யாரும் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை. அங்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதற்கான தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை விண்ணப்பம் அனுப்ப கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களின் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 196 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிரபல விஞ்ஞானிகள், கல்வித்துறை வல்லுநர்கள் என பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். பிரபல இஸ்ரோ விஞ்ஞானியும் மங்கள்யான், சந்திராயன் விண்வெளி திட்டத்திற்கு இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரையும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
இவர்களை தேர்வு செய்வதற்காக தனியாக தேர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.கே. ஓஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் 3 மாதத்திற்குள் விண்ணப்பதாரர்களை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு கவர்னர் துணைவேந்தரை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பார். #MayilsamyAnnadurai #MaduraiKamarajUniversity
சென்னை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு, கடந்த ஜூன் 14-ந்தேதி தீர்ப்பளித்தது.
பல்கலைக்கழக சட்ட விதிகளை பின்பற்றி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டிருந்தது.
இந்த உத்தரவின் நகல் கிடைக்கும் முன், விடுமுறை தினமான கடந்த ஜூன் 16-ந்தேதி பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள அரசு அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, துணைவேந்தர் தேர்வுக் குழுவுக்கு சிண்டிகேட் பிரதி நிதியாக தங்கமுத்து நியமிக்கப்பட்டார்.
தங்கமுத்து நியமனத்துக்கு தடை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிதிகளை பின்பற்றாமல், அவசர கதியில் சிண்டிகேட் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மீண்டும் தகுதியில்லாதவரே துணை வேந்தராக தேர்வு செய்யக் கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.
இதையடுத்து, தங்கமுத்து நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளி வைத்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் செல்லத்துரை. கடந்த ஆண்டு மே 27-ந்தேதி அவர் நியமிக்கப்பட்டார்.
இவருக்கு எதிராக மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மதுரை மாவட்ட செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் “மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரைக்கு பேராசிரியராக 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இல்லை. அவரது நியமனம் சட்ட விரோதமானது. இதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, செல்லத்துரையை துணை வேந்தராக நியமித்த உத்தரவை ரத்து செய்து கடந்த 14-ந்தேதி உத்தரவிட்டது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும், இந்த குழு 3 மாதத்துக்குள் புதிய துணை வேந்தரை சட்டத்துக்கு உட்பட்டு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
அதன்படி இந்த அப்பீல் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மனுதாரர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. #SC #MaduraiKamarajUniversity #Sellathurai
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் செல்லத்துரை. இவரது நியமனம் சட்ட விரோதமானது என்றும், அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட ஐகோர்ட்டு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு 3 மாதத்திற்குள் புதிய துணைவேந்தரை சட்டத்துக்குட்பட்டு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து செல்லத்துரை கூறியதாவது:-
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறேன்.
கடந்த ஓராண்டாக பல்கலைக்கழக வளர்ச்சிக்காக பல திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் 28-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளேன்.
துணைவேந்தர் பதவிக்கான அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது. நேர் காணலில் கூட அதிக மதிப்பெண் பெற்றேன். தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தராக தேர்வு செய்யப்பட்டேன.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை சட்ட ரீதியாக சந்திப்பேன். இறைவன் மிகப்பெரியவன் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக தொடருவதில் எந்த சிக்கலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐகோர்ட்டில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய செல்லத்துரை வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்னும் ஓரிரு நாளில் அப்பீல் செய்ய திட்டமிட்டுள்ளார். #ViceChancellorAppointment #vicechancellorchelladurai
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக முனைவர் பி.பி. செல்லத்துரை நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடிப்படைத் தகுதியற்ற, ஏராளமான புகார்களுக்கு உள்ளான ஒருவர் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலம் காமராசர் பல்கலைக்கழகம் காப்பாற்றப்பட்டிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியளித்தாலும், துணை வேந்தர் நியமனங்கள் அடிக்கடி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் அளவுக்கு சீரழிந்திருப்பது வேதனையளிக்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் செல்லத்துரை கடந்த ஆண்டு மே 27-ந்தேதி நியமிக்கப்பட்டபோதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.
பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதாகும். ஆனால், செல்லத்துரைக்கு அத்தகுதி இல்லை. அது தவிர பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டன. இதற்கெல்லாம் மேலாக காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் பணியாற்றிய போது, கிட்டத்தட்ட அவரது அடியாளாக செயல்பட்டு அவருக்கு எதிரானவர்களை மிரட்டும் பணியைத் தான் செல்லத்துரை தலைமையிலான குழு செய்து வந்தது. கல்யாணியின் ஊழல்களை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசனை கூலிப்படையை ஏவி, கொலை செய்ய முயன்ற வழக்கில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.
இப்படிப்பட்ட கல்வித் துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியவர்களை துணைவேந்தராக நியமனம் செய்யக்கூடாது என்பதற்காகத் தான் பா.ம.க. போராடி வந்தது. இப்போது உயர்நீதிமன்றம் மூலமாக நீதி கிடைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை சில மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டிருந்தாலோ, துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்படாமல் இருந்திருந்தாலோ மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மாண்பு காப்பாற்றப்பட்டிருக்கும்.
உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மூலம் மாணவிகளை பல்கலைக் கழக நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் தேவைக்காக சீரழித்தக் கொடூரம் தடுக்கப்பட்டிருக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடை பெற்றுள்ளது. உமா கேட்டரிங் என்ற நிறுவனத்திலிருந்து கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7 கோடிக்கு உணவு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டி, அதில் பெருமளவு தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி துணைவேந்தராக பதவியேற்றதன் ஓராண்டு விழாவை, ஆட்சியாளர்களுக்கு இணையாக விளம்பரம் செய்து கொண்டாடி கல்வியாளர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறார்.
காமராசர் பல்கலைக் கழகத்தில் இவருக்கு முன் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனும் இதே காரணங்களுக்காக உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டவர் தான். நேர்மையின் சின்னமான காமராசர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அந்த பல்கலைக்கழகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உயர்கல்வித்துறைக்கும் ஏற்பட்ட இழுக்கு ஆகும்.
துணைவேந்தர் பதவிகள் கோடிகளில் ஏலம் விடப்படுவதும், இதற்காக அமைக்கப்படும் தேர்வுக் குழுக்களில் இடம் பெறுவோர் கல்வியை விட ஊழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தான் இத்தகைய அவலங்களுக்கு காரணம் ஆகும். செல்லத்துரை நியமனத்திலும் அது தான் நடந்துள்ளது.
தேர்வுக்குழுத் தலைவராக இருந்த முருகதாஸ் கட்டாயப்படுத்தியதன் பேரில் தான் செல்லத்துரை பெயரை பரிந்துரைத்ததாக குழுவின் மற்ற உறுப்பினர்களான இராமகிருஷ்ணன், ஹரீஷ் மேத்தா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இனியும் இத்தகைய அவப்பெயர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு துணைவேந்தர் தேர்வுக்கான நடைமுறைகளை மாற்றிய மைக்க வேண்டும். முதலில் தேர்வுக்குழுவில் இடம் பெறுபவர்கள் துணை வேந்தரை விட கூடுதல் தகுதியும், அப்பழுக்கற்ற பின்னணியும் கொண்டவர்களாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அடுத்ததாக துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் உள்ளிட்ட தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
கடைசியாக ஆளுனருக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக்குழு வெளியிட வேண்டும். அப்போது தான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழலையும், தலைகுனிவையும் தடுக்க முடியும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்த்து, உயர்நீதிமன்ற ஆணைப்படி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, நேர்மையான கல்வியாளர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த ஓராண்டில் செல்லத்துரை மேற்கொண்ட நியமனங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், நியமனங்களில் நடந்த ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #ViceChancellorAppointment
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இன்று மதியம் விசாரித்தது. அப்போது துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டனர். #HighCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்