search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mattu pongal"

    • மாட்டுப் பொங்கல் விடுமுறை நாளான இன்று அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர்.
    • அசைவ பிரியர்களின் கூட்டத்தால் ஞாயிற்று கிழமை போல காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சி அளித்தது.

    ராயபுரம்:

    பொங்கல் பண்டிகை விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்குவது வழக்கம். இதனால் காசிமேடு மீன் மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்தால் களை கட்டும்.

    ஆனால் நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்தனர். இதனால் காசிமேடு பகுதி நேற்று வழக்கமான பரபரப்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் மாட்டுப் பொங்கல் விடுமுறை நாளான இன்று அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக காசிமேடு மீன் ஏலம் விடும் பகுதியில் அதிகாலை 2 மணி முதலே சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் மீன் வாங்க திரண்டனர்.

    வழக்கத்திற்கு மாறாக திங்கட்கிழமையான இன்று கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் ஏராளமானோர் மீன் வாங்க குவிந்ததால் விற்பனை களை கட்டியது.

    அசைவ பிரியர்களின் கூட்டத்தால் ஞாயிற்று கிழமை போல காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சி அளித்தது.

    எனினும் மீன் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. கடந்த வாரத்தில் ரூ.900-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.1500-க்கும், ரூ.600-க்கு விற்ற வவ்வாள் மீன்-ரூ.900-க்கும், ரூ.450-க்கு விற்ற சங்கரா ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் பழவேற்காடு மீன் ஏல கூடத்திலும் மீன் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலை வழக்கத்தை விட இரு மடங்கு உயர்ந்து காணப்பட்டது.

    • மாட்டுப் பொங்கல் தினத்தோடு தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.
    • பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயரவில்லை.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சமைப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பொங்கல் வந்ததால் அசைவ பிரியர்கள் எடுத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக இன்று அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.

    மாட்டுப் பொங்கல் தினத்தோடு தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது. அதனால் இன்று இறைச்சி கடைகள் வழக்கமாக மூடப்பட வேண்டும்.

    ஆனால் பண்டிகை நாளாக இருப்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. காலையிலேயே வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

    சென்னையில் புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள இறைச்சி கூடங்கள் இன்று மூடப்பட்டன. ஆனாலும் சென்னையில் அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப இறைச்சி கடைகள் முழு அளவில் செயல்பட்டன.

    நேற்று இரவே இறைச்சி கடைகளுக்கு ஆட்டு தொட்டியில் இருந்து இறைச்சி வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன.

    பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயரவில்லை. கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரையிலும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 முதல் ரூ.1000-க்கும் விற்கப்பட்டது.

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
    கோவை:

    தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகள் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா 112 அடி ஆதியோகி முன்பு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஈஷா மாட்டுமனையில் வளர்க்கப்படும் காங்கேயம், உம்பாளச்சேரி, ஆலம்பாடி, வெச்சூர், கிர், சாஹிவால், ஓங்கோல் உள்ளிட்ட 16 வகையான நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுற்று வட்டார கிராம மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மண் பானை களில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தாராபுரத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பறையாட்டம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விழாவுக்கு வருகை தந்து நாட்டு மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், கோ பூஜை நடைபெற்றது.

    பொங்கல் விழா குறித்து சத்குரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மகர சங்ராந்தி என்பது மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாளில் சூரியனுக்கும் பூமிக்குமான தொடர்பில் ஒரு மாற்றம் நடக்கிறது. நம் உயிருக்கு மூலமான சக்தி என்றால் அது சூரிய சக்தி தான். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய சக்தியால் தான் இயங்குகின்றன.

    மகர சங்கராந்தி நாளில் இருந்து வெயில் சற்று அதிகரிக்க துவங்கும். அந்த வெயிலால் மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டம் வெயிலால் வரவில்லை. வெயிலால் உயிர் நடக்கிறது. வெயிலால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வளர்கிறது.

    நிழல் இல்லாததால் தான் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.

    பொங்கல் நாளில் ஈஷாவில் 16 வகையான நாட்டு மாடுகளை கண்காட்சிக்கு வைத்துள்ளோம். அதற்கு காரணம், நம் நாட்டில் இத்தனை வகையான நாட்டு மாடுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்குதான். நாம் டிராக்டர் போன்ற கருவிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். டிராக்டரை கொண்டு உழவ வைத்து கொள்ளலாம்.

    ஆனால், மண்ணை வளப்படுத்த முடியாது. கடந்த 40, 50 வருடங்களில் ஏராளமான வெளிநாட்டு மாடுகளை நம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், நம் நாட்டு மாடுகளுக்கு தற்போது போதிய மதிப்பில்லாமல் செய்துள்ளோம். வணிக நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த செயல் நமக்கு எதிர்மறையாக மாறி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

    நம் நாட்டில் 12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அடுத்த 30 வருடங்களில் நம் நாட்டில் தோராயமாக 25 சதவீதம் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது என சொல்கிறார்கள்.

    விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க வேண்டுமானால், நாட்டு மாடுகளும் மரங்களும் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டு மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.
    ×