search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military aircraft"

    • பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.
    • ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும்.

    குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டி.ஏ.எஸ்.எல்) வளாகத்தை மோடி- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ.எஸ்.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

    ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளிக்கும்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி லட்சுமி விலாஸ் அரண்மனையை பார்வையிட்டார். மதியம் 2.45 மணிக்கு அம்ரேலிக்கு செல்லும் அவர் பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார்.

    இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த ராணுவ விமான ஆலை மூலம், விமானப்படைக்குத் தேவையான 'சி-295' ரக போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன.

    • வான் போக்குவரத்து அதிகாரிகளை பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.
    • ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று ஸ்வீடன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகளை திடீர் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.

    கடந்த வெள்ளிக் கிழமை அரங்கேறிய இந்த சம்பவத்தின் போது ரஷிய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் கிழக்கில் உள்ள பால்டிக் தீவான கோட்லாந்தின் வான்பரப்பில் பறந்து சென்றுள்ளன. இதை அறிந்த ஸ்வீடன் ஆயுதப்படை சார்பில், ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

     


    எனினும், ரஷிய விமானிகள் ஸ்வீடனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்வீடன் சார்பில் இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பிறகு ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. ஸ்வீடன் வான்வெளியில் ரஷியா நீண்ட நேரம் அத்துமீறியதாக ஸ்வீடன் ராணுவம் குற்றம்சாட்டியது.

    "ரஷியாவின் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது," என ஸ்வீடன் விமான படை தளபதி ஜோனஸ் விக்மேன் தெரிவித்தார். 

    • 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன.
    • போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்களை தரை இறக்கும் திறன் மதிப்பீடு சோதனையை விமானப்படையினர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

    தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு முதல் ரெணங்கிவரம் வரை அவசர காலத்தில் விமானங்கள் தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலையில் சுகோய் 232 ரக 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன. அதனை ஹாக் ரேஞ்ஜின் வகை 2 விமானங்கள் பின் தொடர்ந்து சென்றன.


    இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்த போது திடீரென தெரு நாய் ஒன்று விமான ஓடு பாதையில் குறுக்கே சென்றது.

    இதனைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நாயை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நடத்திய காட்சி.

    • போர் விமானத்தை இயக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர்.
    • விமானியின் உடல்நிலை சீராக உள்ளது.

    புதுடெல்லி

    இந்திய கடற்படையிடம் உள்ள 'மிக் 29-கே' போர் விமானம், நேற்று கோவாவில் கடலுக்கு மேல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. பயிற்சியை முடித்துக்கொண்டு அது கடற்படை தளத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக்கோளாறில் சிக்கி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர், மின்னல் வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த போர் விமானத்தை இயக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து குறித்து கடற்படை தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கடற்படை விடுத்துள்ள அறிக்கையில், "விமானியின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மிக் 29-கே ரக போர் விமானம், எல்லா வானிலையிலும் இயங்கும் போர் விமானம், இது பல பயன்பாட்டு போர் விமானம், ரஷியாவின் மிக்கோயான் (மிக்) நிறுவனம் தயாரித்தது ஆகும்.

    இத்தகைய 45 விமானங்களை ரஷியாவிடம் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய கடற்படை 200 கோடி டாலருக்கு (சுமார் ரூ.16 ஆயிரம் கோடி) வாங்கியது நினைவுகூரத்தக்கது. இந்த விமானங்கள், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து இயங்குவதற்காக வாங்கப்பட்டது ஆகும்.

    * கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டு சென்றபோது கடற்படையின் மிக் 29-கே போர் விமானம் கோவாவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    * 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மற்றொரு மிக் 29-கே போர் விமானம், ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகி விமானி பத்திரமாக மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    * 2019-ம் ஆண்டு நவம்பர் மாதமும் மிக் 29-கே போர் விமானம், விபத்துக்குள்ளாகி விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இப்படி மிக் 29-கே போர் விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிர வைப்பதாக அமைந்துள்ளது.

    ×