என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Muthusamy"
- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று 5 புதிய பஸ் சேவைக்கான தொடக்க விழா நடைபெற்றது. தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். ஒரே நாளில் ஒரு உத்தரவு போட்டு நானும், முதலமைச்சரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடி விடலாம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.
மதுக்கடைகள் என்றைக்காவது ஒருநாள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய எண்ணம். ஆனால் உடனடியாக இதை செய்தால் என்ன நிலைமை வெளியில் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
எனவே அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக, முதலமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை அதில் இருந்து கொண்டுவரும்போது மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு முன்பு மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா?
பதில்:- இங்கு இருக்கின்ற நிலைமைகளை ஆலோசித்து, இங்கு இருக்கின்ற சூழ்நிலைகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்தவரை அவர்கள், அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவுக்காக ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அதில் எந்த தவறும் நாம் சொல்ல முடியாது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து செய்கிறார்கள், முதலமைச்சரை எதிர்த்து செய்கிறார்கள் என்பது கிடையாது.
அதை அவர்களின் கொள்கையாக மக்களுக்கு எடுத்து செல்கிறார்கள். மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, இந்த உணர்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து கொண்டு வந்து விட்டால் அரசாங்கம் அதை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு அ.தி.மு.க.வினர் சந்தோஷப்படுகிறார்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்படும், தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமையும், பொறுத்திருந்து பாருங்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார்களே?
பதில்:- கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? எதிரிக்கு கூட கொடுக்கிறார்கள்.
கேள்வி:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்களே?
பதில்:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம். அது எங்களுக்கு தெரிகிறது. ஒரு அழைப்பு கொடுத்தவுடன் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அது ஏன் என்பது எங்களுக்கு தெரியவில்லை.
கேள்வி:- ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கு அழைப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்று நினைக்கிறீகள்?
பதில்:- அதை தப்பு என்று சொல்ல முடியாது. ஒரு பொதுவான நிகழ்வுக்காக, ஒரு திட்டத்துக்காக அழைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம் என்று அவர்கள் பொதுவாகத்தான் அழைத்திருக்கிறார்கள். அது தப்பு கிடையாதே? அப்படி ஒரு அழைப்பு கொடுப்பதில் நாம் எப்படி தவறு கண்டு பிடிக்க முடியும்.
கேள்வி:- மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது வெட்கக்கேடான விஷயம் என்று கூறி உள்ளாரே?
பதில்:- மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினரைத்தானே கூப்பிட்டு இருக்கிறார். தமிழக அரசே மதுக்கடையை ஏற்று நடத்துகிறது என்று அ.தி.மு.க.வினரிடம் சொல்வதற்காக இருக்கலாம். இது எப்போது நடந்தது தெரியும் தானே?
கேள்வி:- முதலமைச்சர் இல்லாத நேரத்தில் தான் இதுபோன்ற அழைப்பையெல்லாம் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கிறார்களே?
பதில்:- அப்படி இல்லை. முதலமைச்சர் உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டை தினம்தோறும் கவனித்துக்கொண்டு இருக்கிறார். அவர் கோப்புகளை அங்கிருந்தே பார்த்து கையெழுத்து போட்டு அதுபற்றியெல்லாம் சொன்னார். அதனால் தூரமாக இருக்கிறார் என்று நாம் நம்பிக்கொண்டு எதையும் செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவன் அவரது கட்சியின் கொள்கைக்காக தெளிவாக செய்கிறார். அதில் குற்றம் கண்டுபிடிப்பது தவறு. அதை அரசிய ஆக்குவதற்கு மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.
கேள்வி:- வெளிநாட்டு மதுபான பார் அனுமதி தொடர்ந்து வழங்கப்படுகிறதே?
பதில்:- வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்கவில்லை. எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் கொடுக்கிறோம். வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. டாஸ்மாக் கடையை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் அல்ல.
டாஸ்மாக் கடைகளை மூடும்போது வேறு விதமான ஒரு இடத்துக்கு அவர்கள் போய் தவறாக பிரச்சனையாகி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து தான் அதற்கு அடிப்படையாக சில மாற்றங்களை செய்து அவர்களை ஒழுங்குபடுத்தி நம்முடைய இடத்துக்கு கொண்டு வந்து விட்டு அப்புறம் படிப்படியாக செய்ய வேண்டும். அந்த நோக்கத்தை நிச்சயமாக எல்லோரும் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் 8 நிறுவனங்களுடன் 1300 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் போதை பொருட்கள் கட்டுப்படுத்த அனைத்து வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பார்முலா 4 பந்தயத்தால் சென்னை மக்கள் எல்லோரும் சந்தோஷமடைந்துள்ளனர். ஆசிய துணைக்கண்டத்தில் வேறு எங்கும் நடக்காத அளவு வகையில் நடந்துள்ளது. அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முயற்சிகள் தான் காரணம்.
சி.என்.சி கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கவர்னர் ஒப்புதல் பெற்று மத்திய அரசு ஒப்புதலுக்கு பெறப்பட்டும் தற்போது குடியரசு தலைவர் ஒப்புதல் பெற உள்ளது. நமது பாராளுமன்ற உறுப்பினர் மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 17-ந் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் எவ்வித பிரச்சனைகளின்றி அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தெளிவாக செல்கிறது.
டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மது விற்பனை அரசுக்கு வரக்கூடிய வருமானம் என்பதால் விற்பனை குறித்து மறைத்து சொல்வதில் அவசியம் இல்லை. விற்பனை ஒருசில இடங்களில் குறைந்தால் கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மது பிரியர்கள் பழக்கத்தை விட்டு மது கடைகளில் விற்பனை குறைந்து வருமானம் குறைந்தால் அரசு மகிழ்ச்சி அடையும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுக்கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மிஷன் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பில்லிங் மிஷன் நடைமுறைக்கு வரும் போது கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும். அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மது கடைகளில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மது அருந்திவிட்டு வருபவர்களை போலீசார் பிடிப்பதாக மதுப்பிரியர்களின் புகாரை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தின் நலன் கருதி தான் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
பார்முலா 4 கார் பந்தயம் மாநிலத்தின் திறமை, தகுதியை வெளிக்காட்டி உள்ளோம். இது வீண் செலவு அல்ல.
ஈரோடு வாழ தகுதியற்ற நகரம் அல்ல. சில தொழிற்சாலைகளால் புற்றுநோய் வருவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக 2 நாட்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் 8 நிறுவனங்களுடன் 1300 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை குறித்து இறுதியாக வெளியிடப்படும்.
தமிழகத்தில் போதை பொருட்கள் கட்டுப்படுத்த அனைத்து வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
- கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
எனவே நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். தொடக்கத்தில் 250 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு தற்போது 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நேற்று மாலை 57-வது மைலைக் கடந்த நிலையில் 47 ஆவது மைல் பகுதியாக உள்ள நல்லாம்பட்டியில் உள்ள மழைநீர் வடிகால் பாலத்தில் நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சிறிது சிறிதாக அதிகரித்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.
தொடர்ந்து விரிசல் அதிகரித்தால் மழைநீர் கால்வாய் உடையும் அபாயம் இருப்பதாக கருதி அப்பகுதி விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து மழைநீர் வடிகால் விரிசலை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் இரவோடு இரவாக தொடங்கினர்.
இதுக்கு அடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நல்லாம்பட்டி வாய்க்காலுக்கு அடியே மழை நீரும் வாய்க்கால் கசிவு நீரும் வடிந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் வழியாக மழை பெய்யும் போதும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் போதும் வழக்கமாக தண்ணீர் வெளியேறுவது வழக்கம் தான். இதைத்தான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதாக சிலர் வதந்தி கிளம்பி விட்டிருக்கிறார்கள். தற்போது சுரங்கப்பாதைக்குள் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை நல்லாம்பட்டி அருகே ஒட்டங்காடு பகுதியில் கீழ்பவானி கால்வாயின் 47வது மைலில் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள கசிவு பகுதியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த மழைநீர் வடிகால் மிகவும் பழமையானது.இந்தாண்டு மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிக்கு போதிய அவகாசம் இல்லை. அடுத்தாண்டு இந்த வடிகாலை சீரமைக்க திட்டம் உள்ளது.
இதில் எப்போதும் தண்ணீர் செல்லும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தாண்டு சற்று கூடுதலாக செல்வதாக சந்தேகம் எழுந்ததால் இடையில் நிறுத்தி சீரமைக்கும் பணியானது முடிக்க வேண்டும் என்பதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்விற்கு குறைந்த பட்சம் 15 நாட்கள் ஏற்படும் என்பதால் தற்காலிக பணிகள் மூலம் இந்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால் உள்ளது. அவற்றில் எந்தவித பாதிப்பும் இல்லை. இனி தண்ணீர் செல்லும் போது மழைநீர் வடிகாலில் கசிவு ஏற்பட்டால் அங்கும் தற்காலிக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழ்பவானி கால்வாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதன் கசிவு நீரை பயன்படுத்தும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் கூடுதலாக கசிவு சென்றுகொண்டிருக்கிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி.
- ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
சென்னை:
ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் உடனடி அனுமதி அளிக்கப்படும்.
* ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
- கட்டிட அனுமதி தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டிட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
- நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள நிலப்பயன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும்.
சென்னை:
சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் முத்துச்சாமி பேசியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயன் அடையும் வகையில் 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்பட்டும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும். கட்டிட அனுமதி தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டிட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
அதே போல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் அதற்காக விதிகளை மீற கூடாது. கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி, அந்த துறையின் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நகர் ஊரமைப்பு இயக்கம் மற்றும் நகர்புற வளர்ச்சி குழுமங்கள் பொதுமக்களுக்கு எளிதான சேவைகள் வழங்க தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் கொண்டு மக்களுக்கு தனி இணைய செயலி உருவாக்கப்படும். முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு நகரில் நிலச்சேர்ம வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும். நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள நிலப்பயன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும்.
300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தால் ஈரோட்டில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய வாகன நிறுத்த கொள்கை உருவாக்கப்படும்.
இவ்வாறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
- முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்க உள்ளார்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து பயனாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி பொள்ளாச்சிக்கு வருகிறார். அங்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழா பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு ஆச்சிப்பட்டியில் உள்ள மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக அந்த இடத்தில், மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் விழா நடைபெற உள்ள இடத்தை இன்று அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகிற 13-ந்தேதி பொள்ளாச்சியில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த விழாவில், முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்க உள்ளார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து பயனாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழா நடத்துவதற்காக இந்த மைதானத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். அதனை இன்று பார்வையிட்டுள்ளோம். இங்கு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தொட ங்கி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க இருக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் இப்படி சொல்ல, சொல்ல சொல்ல நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் சொல்வது எங்களுக்கு இன்னும் வேகமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் கொடுக்கிறது என தெரிவித்தார்.
ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி, சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் ஷியமளா நவநீத கிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.
- திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
- 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மகளிர் திட்டத்தில் சிறு தானிய உணவு பொருட்கள் விற்பனையகத்தை வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம். 1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்து விட்டோம்.
ஏற்கனவே போடப்பட்டு உடைந்த பைப்புகள் சரி செய்யப்பட்டது. 6 மோட்டார் இயங்குவதற்கான போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
2016-ம் ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29-ந் தேதி இறுதி நாள். மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வாடகை கட்டிடங்களில் 10 ஆயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததை இடித்து தற்போது வீடுகள் கட்ட உள்ளோம். அந்த இடங்களில் தேவையான வீடுகள் குறித்து கணக்கெடுத்து கட்ட உள்ளோம்.
இதேபோல் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். மேலும் உடுமலைப்பேட்டையில் 110 தனித்தனி வீடுகள் கட்டி விற்காமல் இடிந்துள்ளது. திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 6 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 363 மனுக்கள் ஏற்று அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் கொடுத்தால் அதன் மீது பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து மாதம் கணக்கில் அறிவுறுத்தப்பட்டு அதிகமாக கால அவகாசம் வழங்கிய பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி 14 மட்டும் தான் நடக்கவில்லை என்று பட்டியலிட்டு உள்ளார். அப்படி என்றால் மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டதை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார் என்று தானே அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் மது மட்டுமல்ல அனைத்தும் கூடுதலாக வியாபாரம் ஆகிறது.
- மது பழக்கத்தை தவிர்க்கவும், குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.
ஈரோடு:
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் தேர் ஊர்தி வாகனம் தமிழகம் முழுவதும் வருகிறது. அதன்படி இன்று ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் முத்தமிழ் தேர் வாகனம் வந்தது. இதனை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்வது என்பது அவர்களது வேலை. அதில் எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் ஏ.வ வேலுவே தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு செய்யும் பணி தடைப்படாது.
தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் மது மட்டுமல்ல அனைத்தும் கூடுதலாக வியாபாரம் ஆகிறது. இதை திட்டமிட்டு செய்யவில்லை. தானாக நடக்கிறது. இதை தடுப்பது கடினம். இதற்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதை தடுத்திட வேண்டும் என்று நினைக்க முடியாது. அந்த காலகட்டத்தில் அவர்களது சந்தோஷத்திற்காக குடிக்கிறார்கள்.
மது பழக்கத்தை தவிர்க்கவும், குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். மதுவிற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம் கிடையாது.
இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு தேவையான நடவடிக்கையை செய்து வருகிறோம். டெட்ரா பாக்கெட் பற்றி ஆய்வறிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மது பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிடமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கலுக்கு மதுக்கடை குறைப்பது குறித்து அறிவிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பொங்கலுக்கு பொங்கல் கொடுப்பீர்களா என்று கேட்டால் நன்றாக இருக்கும். மது கடைகள் குறைப்பது குறித்து சொல்லமுடியாது என்றார்.
- ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
வால்பாறை:
கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் 5 மோட்டார் சைக்கிள்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர்.
சோலையாறு நல்லகாத்து சுங்கம் என்ற இடத்துக்கு சென்ற அவர்கள், சோலையார் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது மாணவர் வினித் ஆற்றில் உள்ள சுழலில் சிக்கி கொண்டு சத்தம் எழுப்பினார்.
அவரை காப்பாற்றுவதற்காக, தனுஷ், சரத், நபில், அஜய் ஆகியோர் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களும் சுழலில் சிக்கி வெளியில் வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கினர்.
இதை கரையில் இருந்த சக நண்பர்கள் பார்த்து அபயகுரல் எழுப்பவே அருகே வசித்து வரும் பொதுமக்கள் ஓடி வந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வினித், தனுஷ், அஜய், சரத், நபில் ஆகிய 5 பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்களது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது, அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்களில் வினித், தனுஷ், அஜய் ஆகியோர் கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தை சேர்ந்தவர்கள். இதில் வினித்தும், தனுசும் அண்ணன் தம்பிகள் ஆவர்.
ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் சுற்றுலா சென்ற இடத்தில் இறந்ததால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு இறந்த 5 கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிணத்துக்கடவு மணிகண்டபுரத்திற்கு சென்ற அவர் வினித், தனுஷ் ஆகியோரின் பெற்றோர்களான ராமகிருஷ்ணன்- கவிதா, அஜயின் பெற்றோர் ரவி-தெய்வானை ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார்.
- டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் 111 கர்ப்பிணி பெண்களுக்கும், மாவட்டம் முழுவதும் 3000 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெவ்வேறு நாட்களில் நடத்தப்படுகிறது.
இது ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு ஓய்வு வீடுகளில் கிடைக்காத சூழல் உள்ளது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என பொதுவாக கருத்து சொல்வதுண்டு.
எனினும் மருத்துவரிடம் ஆலோசித்து செயல்பட வேண்டும், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன இந்த துறையின் சார்பாக அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார். பேருந்து பயணம், உரிமைத்தொகை அரசு, பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம் குடும்ப பெண்களுக்கு சுமையை குறைத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இவ்வாறாக ஒவ்வொன்றாக பெண்களின் நலன் கருதி முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
டெங்கு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் டெங்கு பாதிப்பு குறித்து தகவல் கிடைத்தால் அந்த பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளனர்.
டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற மாநில ங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய தனிக்குழு அமைத்து இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன அதை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் முழுமையாக அதைப்பற்றி கருத்துக்கள் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 அல்லது 2 இடங்களில் மட்டும் இல்லை. 99 சதவீதம் மதுக்கடைகளில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
அதையும் டாஸ்மாக் பொது மேலாளர் மூலமாக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்களை புகைப்படங்களாக எடுத்து அதை பட்டியலாக தயாரித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அது எங்களுக்கு ஊக்கமாக அமையும். பணிகளை விரைவுபடுத்த நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பயனுடையதாக இருக்கும். மது விற்பனை நேரம் குறைப்பதற்கும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைக்கப்பெற்றதும் அதை நடைமுறைப்படுத்த அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது நீதிமன்றம் உத்தரவு என்பதால் அதற்கு கீழ்படிந்து தான் ஆக வேண்டும்.
வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன. துறை அதிகாரிகள் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு நினைவு சின்னம் சிறந்த திட்டமாக ஏற்படுத்தப்படும்.
இவை கலைஞரின் நினைவை மட்டும் போற்றுவதாக மட்டுமல்லாமல் மக்களுக்கு 100 விழுக்காடு பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 15 ஆயிரம் பேருக்கு விற்பனை பத்திரங்கள் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
- விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை தி.மு.க மாவட்ட செயலாளர் பேசியதாக வெளியான ஆடியோ தவறான ஆடியோ. இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல. வேண்டுமென்றே இட்டுகட்டி போடப்பட்டுள்ளது. இது விசாரணையில் உள்ளது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குவது என்பது ஒரு கட்சிக்காக அவர் வேலை. அவருடைய வேலையை அவர் செய்கிறார். நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம்.
மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மதுப்பழக்கம் உள்ளவர்களை உரிய முறையில் அணுகி அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளவும், மதுப்பழக்கத்தை அவர்களாகவே கைவிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
புதிதாக மது அருந்த வரும் இளம் வயதினருக்கு கவுன்சிலிங் தரப்படும். இதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது.
விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக டெட்ரா பேக் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளதையும் பார்த்து விட்டு அதில் எது சிறந்ததோ அதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்